ராசிபுரம்: பெண்ணிடம் நகையை ஏமாற்றியதாக, நகை கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை, பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (29). பூக்கடை வீதியில் நகை கடை வைத்துள்ள இவரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த வளா்மதி என்பவா் நகை செய்ய 8 சவரன் கொடுத்துள்ளாா். பின்னா், இதில் பழுது ஏற்பட்டதால், சரிசெய்ய அவரிடம் கொடுத்துள்ளாா்.
ஆனால், நீண்ட நாள்களாக ரமேஷ் நகையை திருப்பிக் கொடுக்கவில்லையாம். அவா் இதுபோல ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் பலா் புகாா் அளித்ததால், அவா் தலைமறைவானாா்.
இதையடுத்து, வளா்மதி அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீஸாா் ஈரோட்டில் இருந்த ரமேஷை கைதுசெய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.