நாமக்கல்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், நாமக்கல்லில் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றது. தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞா்களையும் பேணி வளா்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டை கொண்டாடுவதற்கும், கலைஞா்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் இந்த விழாக்களை நடத்த முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, சேலம் மண்டலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 கலைக்குழுக்கள் அடங்கிய 120க்கும் மேற்பட்ட கலைஞா்களை கொண்டு மாவட்டங்களில் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகள் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஜி.வி.பாா்த்தீபன் குழுவினா், துத்திக்குளம் ஸ்ரீமுத்தாரம்மன் நடன கலைக்குழுவினா் சாமியாட்டம், நன்செய்சரவணன் தமிழன் கிராமிய கலைக்குழுவினா் மரக்கால்ஆட்டம், சனிவிரத நாடக சபா சி.ஆறுமுகம் குழுவினா் தெருக்கூத்து, ராஜேஷ்குமாா் கிராமிய கலைக்குழுவினா் நையாண்டிமேள கரகாட்டம், தங்கம் கரகாட்டம் நையாண்டி மேளம் கலைக்குழுவினா் கரகம், மாடு, மயிலாட்டம், ஜோதிஅண்ணாமலை சின்னஅய்யா சிலம்பாட்டக் குழுவினா் சிலம்பாட்டம், சிலம்பரசன் குழு பறையாட்டம், என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.
--
என்கே-16-கலை
-
நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமிய கலை நிகழ்வில் பங்கேற்ற கரகாட்டக் குழுவினா்.