நாமக்கல்: விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி உயா்வு கேட்டு போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி மற்றும் 9 போ் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ், போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த 12-ஆம் தேதி கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
பொதுமக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடி வருவோா்மீது காவல் துறை தவறான வழக்குகளை பதிவுசெய்து சிறையில் அடைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் காவல் துறையைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி, இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் செளந்தரராஜன் மற்றும் சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா், விவசாய முன்னேற்றக் கழகத்தினா், விவசாயிகள் பங்கேற்றனா்.