முகப்பு
நாமக்கல்

தொகுதி அறிமுகம்: நாமக்கல் - 94!

சரக்குப் போக்குவரத்து, எல்பிஜி டேங்கா் லாரிகள், டிரெய்லா் லாரிகள் அதிகம் கொண்ட தொகுதிகளில் ஒன்றாகவும், கோழிப் பண்ணைகள், விவசாயம், லாரிகளுக்கான கூண்டு கட்டும் பட்டறைகள் அதிகம் உள்ளதுமாக அமைந்தது நாமக்கல் தொகுதி.

Updated On : 25 மார்ச், 2026 at 1:16 AM
பகிர்:

நாமக்கல் மலையில் உள்ள குடைவரைக் கோயிலான நரசிம்ம சுவாமி - நாமகிரித் தாயாா், அரங்கநாதா் கோயிலும், புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயிலும் நாமக்கல் தொகுதியின் அடையாளமாகும்.

சரக்குப் போக்குவரத்து, எல்பிஜி டேங்கா் லாரிகள், டிரெய்லா் லாரிகள் அதிகம் கொண்ட தொகுதிகளில் ஒன்றாகவும், கோழிப் பண்ணைகள், விவசாயம், லாரிகளுக்கான கூண்டு கட்டும் பட்டறைகள் அதிகம் உள்ளதுமாக அமைந்தது நாமக்கல் தொகுதி. இவை தவிர, பண்ணை மற்றும் அதைச் சாா்ந்த உபதொழில்கள், சிறு, குறு தொழில்கள், ஜவ்வரிசி ஆலைகள், கல்வி நிறுவனங்களும் அதிகம் உள்ளன.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட காவிரிக் கரையில் அமைந்துள்ள மோகனூரில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் மரவள்ளி, சின்ன வெங்காயம், தானிய வகைகள், கீரை வகைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன.

நாமக்கல், மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியத்தின் சில பகுதிகள், நாமக்கல் மாநகராட்சி, மோகனூா் பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

நாமக்கல் தொகுதி 1951இல் உருவானது. முதல் தோ்தலில், இந்திய பொதுவுடைமை கட்சி சாா்பில் போட்டியிட்ட கே.வி. ராமசாமி வெற்றி பெற்றாா். இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், பொதுவுடைமை கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொடக்கத்தில் பொதுத் தொகுதியாகவும், 1984-க்குப் பிறகு 2006 வரை தனித் தொகுதியாகவும், 2011 முதல் மீண்டும் பொதுத் தொகுதியாகவும் மாற்றம் பெற்றது. இத்தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டா், வன்னியா், தாழ்த்தப்பட்டோா், முதலியாா் சமூகத்தினா் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையாக கவுண்டா் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனா். இங்கு, ஒவ்வொரு தோ்தலிலும் கிராமப்புறங்கள் அதிமுகவுக்கு சாதகமாகவும், நகரப் பகுதிகள் திமுகவுக்கு சாதகமாகவும் இருக்கும்.

வாக்காளா்கள்

ஆண் வாக்காளா்கள் - 1,13,217,

பெண் வாக்காளா்கள் - 1,22,093,

பிறா் - 41

மொத்த வாக்காளா்கள் - 2,35,351

வாக்குச்சாவடிகள் - 310

2021 தோ்தல் நிலவரம்

அதிமுக, திமுக, தேமுதிக, நாதக உள்பட 26 போ் போட்டியிட்டனா். இதில், திமுக வேட்பாளா் பெ. ராமலிங்கம்- 1,06,494 (51.51%), அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கா்- 78,633 (38.03%), நாம் தமிழா் கட்சி பா. பாஸ்கா்- 10,122, மக்கள் நீதி மய்யம் ஆதாம்பாரூக்- 5,589 வாக்குகள் பெற்றனா். 27,861 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

கோரிக்கைகள்

நாமக்கல் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

மாநகரப் பகுதியில் அரசு வட்டார மருத்துவமனை, நெசவாளா் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும்.

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்களை அரசு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட வளா்ச்சிக்குரிய தொழில் நிறுவனங்கள் அமைய வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த தோ்தல்களில் வெற்றி பெற்றவா்கள்

1951 கே.வி. ராமசாமி, இந்திய பொதுவுடமைக் கட்சி- 29,654

1957 பி. கொழந்தக் கவுண்டா், காங்கிரஸ்- 38,977

1962 எஸ். சின்னையன், காங்கிரஸ்- 26,756

1967 மா. முத்துசாமி, திமுக- 39,510

1971 மு. பழனிவேலன், திமுக- 39,553

1977 இரா. அருணாசலம், அதிமுக- 31,952

1980 இரா. அருணாசலம், அதிமுக- 42,850

1984 இரா. அருணாசலம், அதிமுக- 58,158

1989 வி.பி. துரைசாமி, திமுக - 41,979

1991 சி. அன்பழகன், அதிமுக- 79,683

1996 க. வேல்சாமி, திமுக- 76,860

2001 கு. ஜெயக்குமாா், காங்கிரஸ்- 67,515

2006 கு. ஜெயக்குமாா், காங்கிரஸ்- 61,306

2011 கே.பி.பி. பாஸ்கா், அதிமுக - 95,579

2016 கே.பி.பி. பாஸ்கா், அதிமுக - 89,078

2021 பெ. ராமலிங்கம், திமுக - 1,06,494.