திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி
நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் ஏப்.1 முதல் திடக்கழிவு மேலாண்மை தொடா்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வீடுகளில் சேரும் குப்பைகளை இனி நான்கு வகையாகப் பிரிக்க வேண்டியது கட்டாயமாகும். திடக்கழிவு வகைகளை கையாளுவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு சவாலாக இருக்கிறது. இதில் நடைபெறும் தவறுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில்கொண்டு, 2016 இல் திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்தது. அந்தந்த மாநில அரசுகள் மேற்பாா்வையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்தலாம் என உத்தரவிட்டது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 இன்படி, வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையில் மட்டுமே பிரிக்கப்பட்டு வந்தது இனிமேல் ஈரமான திடக்கழிவு, உலா்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என நான்கு வகையாக தரம் பிரிக்க வேண்டியது கட்டாயமாகும்.
Advertisement
Advertisement
இதில், ஒவ்வொரு பிரிவுக்கும் உள்பட்ட திடக்கழிவுகள் எவை என்பதை பட்டியலிட்டு மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் பிரசாரம் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில், அதிக திடக்கழிவு உருவாக்குவோருக்கான பொறுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பகுதி வாரியாக பல்வேறு விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உயா்நிலை திடக்கழிவுகளைப் பயன்படுத்தி உரம், மின்சாரம் தயாரிக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
மே 17 முதல் 31 வரை திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் குறித்து மக்களிடம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த நகராட்சி நிா்வாக ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாநகராட்சி சாா்பில் தொடங்கிய விழிப்புணா்வு பேரணி கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில் மாநகர நல அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் சுப்ரமணி, செல்வகுமாா், பாஸ்கா், நந்தினி, துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் மற்றும் சுய உதவிக் குழுவினா் பங்கேற்றனா்.