முகப்பு
சேலம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய தறிப்பட்டறை உரிமையாளர் கைது

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட

Updated On : 17 அக்டோபர், 2012 at 3:52 PM
பகிர்:

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தறிப்பட்டறை உரிமையாளரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

 சேலம் மாவட்டம் எளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (எ) பச்சமுத்து (34). ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

 இந்த நிலையில் இவர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், கூடங்குளத்துக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவினரை கைது செய்ததைக் கண்டித்தும் எளம்பிள்ளை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement

 இந்த நிலையில் அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஓட்டியதாக பச்சமுத்துவை மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டில் குமாரபாளையத்தில் விசைத் தறித் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவராக பச்சமுத்து பதவி வகித்துள்ளார்.

 மேலும் கடந்த 2002-ம் ஆண்டில் ஊத்தங்கரையில் நக்சல்பாரி இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக இவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள இவரை  தற்போது மகுடஞ்சாவடி போலீஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

 அரசுக்கு எதிராகப் போராடப் போவதாக பச்சமுத்து சுவரொட்டிகள் ஒட்டியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வரும் பச்சமுத்துவுக்கு வனிதா (26)என்ற மனைவி உள்ளார். கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராகப் போராடியவரை சேலத்தில் போலீஸார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.