முகப்பு
சேலம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:30 AM
பகிர்:

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
 சங்ககிரியில் ஒருவழிப் பாதையாக இருந்த புதிய எடப்பாடி சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவழிச் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. அப்போது கழிவு நீர் கால்வாய் அமைத்த போது சாலையின் இரு புறங்களிலும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் பேருந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் கோடை காலங்களில் வெப்பம் சலனத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் வாரச்சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள் மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் அப்பகுதியில் மரங்களை நட்டு வளர்க்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து புதிய எடப்பாடி சாலையில் முதல்கட்டமாக கிழக்கு புறம் லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் சின்னத்தம்பி தலைமையில் வேம்பு, பூவரசு, மருது, நெட்டிலிங்கம், பாதாம், வேங்கை, இலுப்பை, நாவல் உள்ளிட்ட 9 வகையான 17 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இந்த அமைப்புகளின் சார்பில் புதிய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள வீடுகள், கடைகளின் உரிமையாளர்கள் தானாக முன்வந்து கோரிக்கை வைத்தால் அவர்களின் இடங்களின் முன்பாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பசுமை சங்ககிரிஅமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, நிர்வாகிகள் எஸ்.டி.எஸ்.கனகராஜ், சூர்யா, மகேந்திரன், கே.எம்.எஸ்.கனகராஜ், மணிகண்டன், கவின், பாலகுமார், முருகானந்தம், துரைசாமி, மேகலபிரியா, யுவாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.