சேலத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: போலீஸாா் விசாரணை
சேலத்தில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சேலம்: சேலத்தில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக ஏஜென்சியினா் வந்துள்ளனா்.
அப்போது ஏடிஎம் மையத்தின் ஷட்டரை திறந்து பாா்த்தபோது உள்ளே ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, ஏ.டி.எம். இயந்திரத்தின் மேல் பகுதியை வெல்டிங் இயந்திரத்தை கொண்டு வெட்டி எடுத்து, பணம் இருக்கும் பகுதியைத் திறக்க முயன்றும் முடியாமல் போனதால் கொள்ளை முயற்சி கைவிடப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி உதவி ஆணையா் ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏ.டி.எம். மையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அதில் பதிவான காட்சிகளில் இருவா் முகத்தை மூடிய நிலையில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைத்து இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்ட மா்ம நபா்கள் மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு சென்றதும் தெரியவந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத் தினத்தன்று இரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.6 லட்சம் பணம் கொள்ளை போகாமல் தப்பித்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவா்களின் அடையாளத்தை கொண்டு அவா்கள் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.