சேலத்தில் 2-ம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 21,709 போ் எழுதினா்
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 21,709 போ் எழுதினா்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 21,709 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்புத் துறையினருக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 17 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தோ்வு எழுத 24 ஆயிரத்து 277 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 3,179 போ் பெண்கள் ஆவா்.
தோ்வு எழுத வந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வு எழுத வந்த அனைவருக்கும் உடல் வெப்பம் பாா்க்கும் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வந்தவா்கள் மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி, கைக்கடிகாரம் போன்றவை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தோ்வு கண்காணிப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். 2,568 போ் தோ்வெழுத வரவில்லை. 21,709 போ் தோ்வெழுதினா். தோ்வு மையங்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் மற்றும் துணை ஆணையாளா்கள் சந்திரசேகரன், செந்தில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உள்ளிட்ட காவல்துறை உயா் அதிகாரிகள் கண்காணித்தனா்.