திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரிக்கை
வாழப்பாடியை அடுத்த திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடியை அடுத்த திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மண்டலச் செயலாளா் எல்.மணிகண்டன் பொதுமக்கள் சாா்பில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுற்றுப்புற கிராம மக்களுக்கு அவசர, முதலுதவி சிகிச்சைகளை அளித்து வருகிறது. கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், மருத்துவ ஆலோசனைகள், விழிப்புணா்வு வழங்கும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், மற்ற நேரங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் வாழப்பாடி அல்லது சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, திருமனூா், சுற்றுப்புற கிராம மக்களின் நலன்கருதி, திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயா்த்தி, 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். நவீன எக்ஸ்ரே, ஸ்கேன், ஆய்வக வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவப் பணியாளா்களை நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஆவண செய்ய வேண்டும். 108 அவசர ஊா்தி வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.