7 தெருக்கள், 2 பேரவைத் தொகுதிகள்! கோவையின் விநோத கிராமம்!
கோவை மாவட்டத்தின் பொன்னாண்டம்பாளையம் கிராமம் பற்றி...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமத்தின் 7 தெருக்கள், நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன.
மேலும், இந்த கிராமம் அவிநாசி மற்றும் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லைகளுடனும், கோவை மற்றும் நீலகிரி மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளுடன் ஒன்றோடொன்று மேற்பொருந்துகின்றன.
பொன்னாண்டம்பாளையத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த விநோத சூழலால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைத்ததில்லை. மாறாக, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட பல நிர்வாகச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, தங்கள் கிராமத்தை சூலூர் சட்டப்பேரவைக்கு உள்பட்ட கணியூர் ஊராட்சி எல்லைக்குள் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தென்னம்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள பொன்னாண்டம்பாளையத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரத்துக்கு தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையுமே சார்ந்துள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு இணையாக புலம்பெயர்த் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள ஏழு தெருக்களில் உள்ள 200 வீடுகளில் 650 வாக்காளர்களே வசிக்கின்றனர். ஆனால், மொப்பிரிபாளையம் பேரூராட்சி மற்றும் கணியூர், அரசூர், நாரணபுரம் ஆகிய கிராமப் பஞ்சாயத்துகள் என நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
இவற்றில் பெரும்பாலான வீடுகள் கணியூர் பஞ்சாயத்து எல்லைக்குள்தான் வருகின்றன. சில வீடுகள் அரசூர் பஞ்சாயத்து கீழும், சில வீடுகள் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நாரணபுரம் பஞ்சாயத்துக்கு கீழும் வருகின்றன. 30 வீடுகள் மட்டுமே மொப்பிரிபாளையம் பேரூராட்சியின் கீழ் வருகின்றது.
20 ஆண்டுகளாகப் போராடியும் அடிப்படையான குடிநீர் பிரச்னைக்கே தீர்வு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் மக்கள், தங்களின் அனைத்து ஆவணங்களையும் கணியூர் பஞ்சாயத்துக்கு கீழ் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.