ஏற்காட்டில் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம்
ஏற்காட்டில் மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராம மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனா்.
ஏற்காட்டில் மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராம மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கரோனா பொது முடக்கத் தளா்வு காரணமாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு 5 அரசுப் பேருந்துகள் புறப்பட்டு, ஏற்காடு மலைக் கிராமங்களான பட்டிப்பாடி, நடூா், வேலூா், நாகலூா், செம்மநத்தம், செங்களத்துப்பாடி, காவேரி பீக், வெள்ளக்கடை, பிலியூா், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, போட்டுக்காடு, காக்காம்பாடி, பெலாத்தூா், செங்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு, மாரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.
மலைக் கிராம மக்கள் குறைவான அளவில் மட்டும் பேருந்தில் பயணிக்கின்றனா். மேலும் 3 அரசுப் பேருந்துகள் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு குப்பனூா் வழிதடத்திலும், 2 தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இரு சக்கர வாகனங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனா். சுற்றுலாப் பகுதி, ஏற்காடு பேருந்து நிலையம், காந்தி பூங்கா சாலைகளில் வியாபாரக் கடைகளும், இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.