சேலத்தில் மாடுகளுடன் ஆவின் பால் பண்ணை முற்றுகை
சேலத்தில் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசு அடைவதாகக் கூறி பொதுமக்கள் மாடுகளுடன் வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சேலம் அருகே சித்தனூர் பகுதியில் சேலம் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பால் சேகரிக்கப்பட்டு, சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் மூலம் பால் அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்த பால் பண்ணையின் பின்புறம் காத்தவராயன் கோவில் பகுதி மற்றும் சேலத்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருக்கின்றன.
ஆவின் பால் பண்ணையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவதால் பால்பண்ணை அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கெடுவதாகவும்,
வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து திங்கட்கிழமை காலை ஆவின் பால் பண்ணைக்கு மாடுகளுடன் திரளாக வந்தனர்.
பின்னர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
இதை அறிந்த இரும்பாலை போலீஸார் அங்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர்.
பின்னர் போலீஸார் மாடுகளை பிடித்து சென்று ஓரமாக கட்டினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ஆவின் பால் பண்ணை தலைவர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர்.
அப்போது ஆவின் பால் பண்ணை தலைவர் ஜெயராமனிடம் பொதுமக்கள் ,
ஆவின் பால் பண்ணையில் தேங்கி இருக்கும் மழை நீரை உரிய முறையில் அகற்ற வேண்டும். கழிவுநீரை வெளியில் விடக் கூடாது. கழிவுநீர் வெளியேற்றுவதால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு அடைகிறது. நிலத்தடி நீர் மாசு அடைகிறது. இதனால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன என்றனர்.
சேலம் பால்பண்ணை தலைவர் ஜெயராமன், கழிவுநீர் வெளியேற திட்டம் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொதுமக்கள் சிலர் ஒத்துழைப்பு தராததால் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை .
பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் இத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீரை பாதுகாப்பாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.