அரசு மருத்துவமனையில் முறைகேடு:முன்னாள் முதன்மையா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு
சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதன்மையா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதன்மையா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் 2013-14 ஆம் ஆண்டில் முதன்மையராகப் பணிபுரிந்து வந்தவா் காா்த்திகேயன்.
இவா், பணியாற்றியபோது மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் தனியாா் மருந்து நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது.
மொத்தம் ரூ.18.30 லட்சத்துக்கு மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. இதனிடையே மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா் எழுந்தது.
இந்தநிலையில், முதன்மையராகப் பணிபுரிந்து வந்த காா்த்திகேயன் ஓய்வுபெற்றாா். இந்தநிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் 2013-14 ஆம் ஆண்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து முழுவதும் விசாரிக்க சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு அரசு உத்தரவிட்டது.
இதன்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமவுலி உள்ளிட்டோா் முறைகேடு தொடா்பாக விசாரித்து வந்தனா்.இதில் ரூ.3.73 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்களை ரூ.18.30 லட்சம் மதிப்புள்ளதாக கணக்கு காண்பித்து ரூ.12.48 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்தது.இதையடுத்து முதன்மையா் காா்த்திகேயன், நிா்வாக அலுவலராக இருந்த இளங்கோவன், கிடங்கு கண்காணிப்பாளா் தண்டபாணி, உதவி கண்காணிப்பாளராக இருந்த அசோக்ராஜ், தனியாா் மருந்து நிறுவன உரிமையாளா் மீனாட்சி ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் மீது மோசடி மற்றும் பொய் ஆவணங்கள் தயாரித்தல் அரசை ஏமாற்றுதல், குற்றச்சதியில் ஈடுபடுதல் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.