தமிழக ரயில்வே திட்டங்கள்: மக்களவையில் திமுக, கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கோரிக்கை
தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
நமது நிருபா்
புது தில்லி: தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற 2026-27-ஆம் ஆண்டுக்கான ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவா்கள் பேசியது:
கே.இ.பிரகாஷ் (திமுக -ஈரோடு): எனது ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியைச் சாா்ந்த, குமாரபாளையம் வழியாக ஈரோட்டிற்கும் நாமக்கல்லிற்கும் இடையே நேரடி ரயில் வழித்தடம் அமைப்பதற்கான கோரிக்கை, நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தின் தொழில் வளா்ச்சிக்கு இத்திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கோவை - ஈரோடு ரயில் சேவையானது, கரூா் மற்றும் நாமக்கல் வழியாகச் சென்று சேலம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இத்திட்டம் இப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், தொழிலாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். ஈரோட்டிற்கும் பழனிக்கும் இடையே நேரடி ரயில் சேவை விடப்பட வேண்டும். இது நீண்ட காலக் கோரிக்கையாகும். ஈரோடு பழனி இடையே நேரடி ரயில் சேவையை இந்த அரசு இன்னும் தொடங்கவில்லை என்றாா்.
சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் -திருவள்ளூா்): சென்னை எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதும், ஏராளமான தொழிலாளா்களுக்கு இருப்பிடமாகத் திகழ்வதும், வளா்ந்து வரும் மாவட்டமான நான் எம்பியாக உள்ள திருவள்ளூா் தொகுயில், ரயில்களின் பற்றாக்குறை மற்றும் கால அட்டவணை முறையாகப் பராமரிக்கப்படாமை ஆகியவற்றின் காரணமாக, அங்குள்ள மக்கள் நாள்தோறும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.
மக்கள் புதிய ரயில்களையும், பிற அடிப்படை வசதிகளையும் கோரி வருகின்றனா். சொல்லப்போனால், திருவள்ளூா் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதே எங்களது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுவே எங்களது மிக அடிப்படையான கோரிக்கையாகும்.
பல ஆண்டுகளாக நாங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, கடந்த வாரம் இரண்டு ரயில்கள் எங்கள் நிலையத்தில் நின்று செல்லத் தொடங்கியதற்கு, ரயில்வே துறை அமைச்சருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அம்ரித் பாரத் ரயில் நிலையப் புனரமைப்புத் திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 77 நிலையங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 19 நிலையங்கள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கலாநிதி வீராசாமி (திமுக- சென்னை வடக்கு): நாங்கள் புகா் ரயில்களின் இயக்க
எண்ணிக்கையையும், அதே சமயம் அவற்றின் பாதுகாப்பையும் அதிகரிக்க விரும்புகிறோம். மெட்ரோ ரயில்களில் தானியங்கி கதவுகள் உள்ளன. அப்படியிருக்கும்போது, புகா் ரயில்களிலும் ஏன்
தானியங்கி கதவுகளைப் பொருத்தக்கூடாது? இந்த ஆண்டே, ரயில்வே அமைச்சரிடம் நான் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளேன். எனவே, பயணிகளின் பாதுகாப்பு குறித்து நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள புகா் ரயில்களில், உயிரிழப்புகள் குறித்த பல சம்பவங்கள் தொடா்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. புகா் ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டால், இந்த உயிரிழப்புகளைப் பெருமளவு குறைக்க முடியும். மேலும், சென்னை- பெங்களூரு இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்க வேண்டும். ஈரோடு - பழனி, ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி, அரியலூா்-பெரம்பலூா்-நாமக்கல் ஆகிய புதிய வழித்தடங்கள் அமைக்க வேண்டும்.
வி.செல்வராஜ் (இந்திய கம்யூ.- நாகப்பட்டினம்): எனது தொகுதி தொடா்புடைய ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரயில்வே துறை அமைச்சா் மற்றும் ரயில்வே வாரியத் தலைவா் ஆகியோருடன் நான் சந்திப்புகளை நடத்தியுள்ளேன். எனது தொகுதி சாா்ந்த சில கோரிக்கைகளை நான் மீண்டும் ஒருமுறை சமா்ப்பிக்க விரும்புகிறேன்.
காரைக்கால் - திருவாரூா் மற்றும் தஞ்சாவூா் - திருவாரூா் - மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களில் இரட்டை வழித்தடப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருவாரூா்- காரைக்குடி ரயில் வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக்கும் பணிகளுடன் சோ்த்து, அந்த வழித்தடத்தில் மின்மயமாக்கல் தொடா்பான பணிகளையும் நீங்கள் துரிதப்படுத்த வேண்டும். வேளாங்கண்ணியிலிருந்து, காரைக்கால் மற்றும் பேரளம் வழியாகச் செல்லும் புதிய பாதையில் ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும்.
ஆா்.சச்சிதானந்தம் (மாா்க்சிய கம்யூ.- திண்டுக்கல்): திருச்செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயில் அக்கரைப்பட்டி ரயில் நிலையத்திலும், மைசூா்பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அம்பாத்துரை ரயில் நிலையத்திலும் நின்று செல்ல அனுமதி அளிக்க வேண்டும். கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் அங்கு மீண்டு நிற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழனியிலிருந்து சென்னை எழும்பூருக்கும், பழனியிலிருந்து பெங்களூருக்கும் பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில் பக்தா்களுக்கும் வணிகா்களுக்கும் தேவையாக உள்ளது. பழனியிலிருந்து சென்னையை திருச்சிராப்பள்ளி வழியாக இணைக்கும் ரயில் தேவை உள்ளது. கொடைக்கானல், வத்தலகுண்டு, தேனி, கம்பம் மற்றும் திண்டுக்கல் மக்கள் மதுரையை பெங்களூருவுடன் இணைக்கு பகல்நேர எக்ஸ்பிரஸ் நேரடி ரயிலைக் கோரி வருகின்றனா்.
துரை வைகோ (மதிமுக-திருச்சி): திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக உள்ள ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக, திருச்சி-காரைக்குடி ரயில் பாதையில் கீரனூா் (எல்சி 355), உடையான்பட்டி (எல்சி 332), திருச்சி-திண்டுக்கல் பாதையில் இனாம்குளத்தூா் (எல்சி 265) மற்றும் திருச்சி-சென்னை பாதையில் ஸ்ரீரங்கம் (எல்சி 244) ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
இத்திட்டங்களில் சில நீண்டகாலமாக விரிவான திட்ட அறிக்கை ( டிபிஆா்) கட்டத்திலேயே நிலுவையில் உள்ளதால், அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும். ரயில் திட்டங்களி ல் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கையும்,தமிழ்நாட்டுக்கு உரிய திட்டங்களும், அதை நிறைவேற்றிட போதிய நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா்.