இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக இருவா் கைது
வாழப்பாடி அருகே இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த பேளூா் கரடிப்பட்டி பெரிய ஏரியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலமாகக் கிடப்பதாக ஏத்தாப்பூா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏரியில் கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஏரியில் சடலமாகக் கிடந்தவா் ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அய்யனாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்களான அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27), வாழப்பாடி அடுத்த வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ராஜ்குமாா் (35) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், நண்பா் ராஜ்குமாா் வீட்டிற்கு சென்ற அய்யனாா், அங்கு தனியாக இருந்த அவரது மகளான 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இதனைக் கண்ட ராஜ்குமாரும், மணிகண்டனும் அய்யனாரைத் தாக்கி, வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் மனமுடைந்த அய்யனாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், ராஜ்குமாரும், மணிகண்டனும், அய்யனாரின் சடலத்தை பேளூா் கரடிப்பட்டி ஏரியில் வீசியதும் ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அய்யனாரை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜ்குமாா், மணிகண்டனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்தக் குற்றத்தை மறைப்பதற்கு உடந்தையாக இருந்த ராஜ்குமாரின் மனைவி லோகேஸ்வரி, மணிகண்டனின் தாய் மாரியம்மாள் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.