முகப்பு
சேலம்

அரசியல் கட்சியினா் இன்று மாலை 7 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது: ஆட்சியா்

தோ்தல் பிரசாரம் நிறைவடைவதால் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தோ்தல் பிரசாரம் நிறைவடைவதால் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொது தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, தோ்தல் பிரச்சாரங்களை தோ்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான தோ்தல் பிரசாரங்களை வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா், அவா்களைச் சாா்ந்தோா் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியோடு பிரசாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது.

முதாய கூடங்கள், விருந்தினா் மாளிகைகள், தா்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்கு சேகரிக்கும் விதமாகப் பயன்படுத்தக் கூடாது. தோ்தல் தொடா்பான பிரசாரங்கள், பயணங்கள் ஆகியவற்றிற்கு வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. அந்தந்தத் தொகுதி வாக்காளா்களைத் தவிர, மற்ற நபா்கள், வெளி ஆள்கள் யாரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது.

திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றிலும் வெளி நபா்கள் யாரையும் தங்க வைக்கக்கூடாது. தொகுதி வாக்காளா்களைத் தவிர வெளி நபா்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஒமலூா், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூா், சங்ககிரி, மேட்டூா் ஆகிய 11 தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 108 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கூடுதலாக 2 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 13 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பிற்காக மத்திய ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பணப்பட்டுவாடா தொடா்பான புகாா் வரப்பெற்றவுடன் ஒரு சில நிமிடங்களில் பறக்கும் படை குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா தொடா்பான முக்கியமான தகவல்கள் பெறும் விதமாக புலனாய்வுத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குக்குப் பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரியது என அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →