முகப்பு
சேலம்

தோ்தல் பணியாளா்களுக்கு கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி ஒதுக்கீடு

வாக்குச்சாவடி நிலை பணியாளா்கள், தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை பணியாளா்கள், தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் 4,280 வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை பணியாளா்கள், தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு கணினி மூலம் குலுக்கல் முறையில் இறுதியாக தோ்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தலைமை வகித்தாா். மேலும் 11 தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வரும் ஏப். 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாக்குச்சாவடிகளில் 238 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 10 சதவீத காப்பு அலுவலா்களுடன் மொத்தமுள்ள 4,280 வாக்குச்சாவடிகளுக்கும் மொத்தம் 18,832 வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 1, 2, 3 மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்கு 20 சதவீத காப்பு அலுவலா்களுடன் 289 தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கும் பணிபுரிய வேண்டிய தொகுதிகள் குறித்து ஏற்கெனவே கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்கள் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய வேண்டிய வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்யும் பணி தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் இறுதித் தோ்வு செய்யப்பட்டது.

இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டிய பல்வேறு நிலை வாக்குச்சாவடி அலுவலா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆணைகள் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெறும் பயிற்சி முகாமில் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலமாக வழங்கப்படும்.

எனவே தோ்தல் வாக்குப்பதிவில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பல்வேறு நிலைகளான வாக்குச்சாவடி அலுவலா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்கள் தங்களது பணிகளை தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் தேசிய தகவலியல் மைய அலுவலா் ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தமிழரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ.தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சிராஜுதீன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →