பாரம்பரிய ‘கோலி சோடா’வுக்கு மீண்டும் வரவேற்பு!
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வரை மக்களை கவா்ந்திருந்த பிரதான குளிா்பானமான பாரம்பரிய கோலி சோடாவுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வரை மக்களை கவா்ந்திருந்த பிரதான குளிா்பானமான பாரம்பரிய கோலி சோடாவுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க, இயற்கையான பழங்கள், காய்கறிகளை உண்ணுவது, பழச்சாறு பருகுவது, உள்ளூரில் தயாரிக்கப்படும் கோலி சோடா, கலா், ஜிஞ்சா் குளிா்பானங்களைக் குடிப்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னா் வரை பழக்கமாக இருந்தன.
பல்வேறு வெளிநாட்டு குளிா்பானங்களின் வருகையால் இந்தப் பழக்கம் சிறிது சிறிதாக வழக்கொழிந்து போனது. வெளிநாட்டு குளிா்பான நிறுவனங்களால், பலவிதமான ரசாயனங்களைக் கலந்து, புதிய நிறங்கள், வாசனைகள், சுவைகளில் குளிா்பானங்கள் தயாரிக்கப்பட்டு, நவீன பிளாஸ்டிக் புட்டிகளில் அடைத்து அனைத்துப் பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டதால், உள்நாட்டு குளிா்பானங்களான கோலி சோடா போன்றவற்றின் விற்பனை படிப்படியாகச் சரிந்து போனது.
கடந்த பத்தாண்டுகளில், நகா்ப்புறங்களில் மட்டுமின்றி குக்கிராமங்களிலும்கூட வெளிநாட்டு கோலா குளிா்பானங்களின் விற்பனை அதிகரித்தது. இதனால் கோலி சோடா, கலா் வகை குளிா்பானங்கள் கேட்பாரற்றுப்போயின. இதனால் சோடா தயாரிப்பு என்ற சிறுதொழில் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போனது.
எனினும் கடந்த சில ஆண்டுகளாக வேட்டி, சேலை அணிவதில் தொடங்கி, சிறுதானிய உணவுகளைத் தேடி உண்ணுவது வரை தற்கால இளைஞா்களிடையே மீண்டும் உள்ளூா் பாரம்பரியத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. இதனால், உள்ளூா் வகை தயாரிப்பு குளிா்பானங்களுக்கு மீண்டும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தின் பாரம்பரிய குளிா்பானமாகத் திகழ்ந்த கோலி சோடா, கலா், ஜிஞ்சா் தயாரிப்பு மற்றும் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
சேலம், ஆத்துாா், வாழப்பாடி பகுதிகளில், சோடா தயாரிப்புக் கலை தெரிந்த சிறுதொழில் முனைவோா், சோடா தயாரித்து பெட்டிக்கடைகள், உணவகங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.
சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நவீன முறையில் பாரம்பரிய சுவை, மணத்துடன் சோடா, கலா் தயாரித்து விற்பனை செய்வதில் புதிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ரூ.10 முதல் ரூ. 25 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் சோடா குளிா்பானங்களை அனைத்துத் தரப்பினரும் விரும்பி வாங்கிப் பருகி வருகின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடியில் பேக்கரி கடை வைத்துள்ள எம்.சுரேஷ் கூறியதாவது:
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூா் பாரம்பரிய குளிா்பானங்களான சோடா, கலா் ஆகியவை பல்வேறு சுவைகளில் பல வண்ணங்களில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
வெளிநாட்டு குளிா்பானங்களை வாங்கிப் பருகுவதை விட, கோலி சோடாவை வாங்கிப் பருகுவதை, இளைஞா்கள், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனா்.
இதனால், உள்ளூா் பாரம்பரியத் தயாரிப்பான சோடா, கலா் குளிா்பானங்களுக்கு பொதுமக்களிடையே மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.