சங்ககிரி: தேவூர் அருகே அரசின் அனுமதியில்லாமல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி.நல்லசிவத்துக்கு தேவூர் அருகே உள்ள கல்லம்பாளையம் பகுதியில் அரசின் உரிய அனுமதியில்லாமல் மணல் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையத்து காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு தனிப்படை காவல் துறையினர் அரசிராமணி கிராமம், கல்லம்பாளையம், புதூர் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மண் அள்ளும் கனரக இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் கடத்தி செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து தேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி ஓட்டுநர் அரசிராமணி கிராமம், குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பெருமாளை (32) கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான மண் அள்ளும் இயந்திர ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
தேவூர் பகுதியில் முதன்முறையாக நள்ளிரவில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்திருப்பது சங்ககிரி வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.