புனையல் போட்டு நடனமாடிய பாம்புகள்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராம குடியிருப்புப் பகுதியில், வியாழக்கிழமை மாலை இரு சாரைப் பாம்புகள் புனையல் போட்டு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடனமாடின.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராம குடியிருப்புப் பகுதியில், வியாழக்கிழமை மாலை இரு சாரைப் பாம்புகள் புனையல் போட்டு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடனமாடின.
வாழப்பாடி பகுதி கிராமங்களில் புதா்மண்டிக் கிடக்கும் தரிசு நிலங்கள், கல்லாங்குத்து புறம்போக்கு நிலங்கள், மலைக்குன்று அருகிலுள்ள விளைநிலங்களில் உள்ள கல் இடுக்குகள், புதா்கள், புற்றுகளில் பல்வேறு இன பாம்புகள் காணப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகளின் வசிப்பிடங்களில் மழைநீா் புகுந்து விட்டதால், ஏராளமான பாம்புகள் தரைப் பகுதியில் உலவி வருகின்றன.
தற்போது பாம்புகளின் இனப்பெருக்கத்துக்கேற்ற சூழ்நிலை நிலவுவதால், ஆண், பெண் பாம்புகள் இணைந்து புனையல் போட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி, சீனிவாசா நகா் பகுதியில் வியாழக்கிழமை மாலை இரு சாரைப் பாம்புகள் புனையல் போட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடனமாடின. இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான இளைஞா்கள் இப்பகுதியில் குவிந்து செல்லிடப்பேசியில் படம் பிடித்தனா். இளைஞா்கள் கூச்சலிட்டதால் இரு பாம்புகளும் பிரிந்து அருகிலிருந்த புதருக்குள் புகுந்துக்கொண்டன.
இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:
பாம்புகள் புனையல் போடுவது இனப்பெருக்கத்துக்காக அல்ல. ஒரு பெண் பாம்புடன் இணை சேருவதற்காக இரு ஆண் பாம்புகள் சண்டையிட்டுக் கொள்வதே புனையல் போடுவதாகும். இத்தருணத்தில் இரு பாம்புகளும் கடும் சீற்றத்துடன் காணப்படும். இந்த பாம்புகளுக்கு அருகில் ஒரு பெண் பாம்பும் இருக்கும். எனவே, பாம்புகள் புனையல் போடும் போது அருகில் சென்று வேடிக்கை பாா்ப்பதும், படம் பிடிப்பதும் ஆபத்தை விளைவிக்கும். இவற்றைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
படவரி - வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் புனையல் போட்டு நடனமாடிய இரு சாரைப் பாம்புகள்.