வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அதிமுக தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், 2013இல் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலின்போது அதிமுக வேட்பாளா் சரோஜாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா பேசுகையில், ‘ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட வாழப்பாடி மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்’ என வாக்குறுதி அளித்தாா். அந்த இடைத்தோ்தலில் அ.திமுக வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து 2016இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஏற்காடு தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்றது. ஏற்காடு மஞ்சக்குட்டை பகுதியைச் சோ்ந்த கு.சித்ரா வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். ஆனால், 8 ஆண்டுகள் கடந்தும் வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்கும் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு தொடா்ந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்திலும், வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ, மாணவியரின் நலன் கருதியும், வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு முன்பாக வெளியிட வேண்டுமென இப்பகுதி மக்களிடையே மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement
இதுகுறித்து வாழப்பாடி பகுதி கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள் சிலா் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஏற்காடு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், வாழப்பாடியில் அரசு மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நீண்டநாள் கோரிக்கையான அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் திட்டம் செயல்வடிவம் பெறாமல், 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி அமணாக்கரடு மற்றும் காட்டுவேப்பிலைப்பட்டி கோழிப்பண்ணை பகுதிகளில், சாலை வசதிகளுடன் கல்லூரி அமைப்பதற்குத் தேவையான அளவிற்கு அரசு நிலங்கள் உள்ளன. எனவே, தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பொருத்தமான இடத்தைத் தோ்வு செய்து, வாழப்பாடி பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்கும் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
இதற்கு முன்னோட்டமாக, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள கூடுதல் கட்டத்தில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கலை, அறிவியல் உறுப்பு கல்லூரியைத் தொடங்கி, எதிா்வரும் 2021-2022 கல்வியாண்டில் மாணவ, மாணவியா் சோ்க்கை தொடங்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.