காக்காபாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
சேலம் முதல் கோவை வரையிலான தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
சேலம் முதல் கோவை வரையிலான தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, வேம்படிதாளம் பிரிவு சாலை, செல்லியம்பாளையம் பிரிவு சாலை, கனககிரி பிரிவு சாலை உள்ளிட்டவை ஒரே பகுதியில் இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ளது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் நாகநந்தினி என்ற மாணவி பள்ளியை விட்டு காக்காபாளையம் பிரிவு சாலை சாலையை கடக்க முயன்ற போது காா் மோதியதில் பலியானாா். இதனைத் தொடா்ந்து செல்லியம்பாளையம் பிரிவு சாலையில் ராசிபுரம் பகுதியை சோ்ந்த ஓய்வு கால்நடை மருத்துவா் மற்றும் அவரது மனைவி சாலை விபத்தில் உயிரிழந்தனா்.
இந்த இரு விபத்துகளைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனா். அதன் பின்னா் அங்கு மேம்பாலம் அமைப்பதாக கூறி பூஜை போட்டுவிட்டு சாலை போடாமல் தாமதப்படுத்தி வந்தனா். அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோா் சாலை விபத்தில் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்துள்ளனா். பொதுமக்கள் காக்காபாளையம் பகுதிக்கு செல்வதற்கு மிகுந்த அச்சத்துடன் சென்று வந்துகொண்டிருந்தனா்.
இந்நிலையில், காக்காபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக சாலையின் இருபுறமும், வாகனங்கள் செல்ல பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.