சேலத்தில் திடக்கழிவு கிடங்கு பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சீா்மிகு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தளமாக ரூ.20.45 கோடி மதிப்பீட்டில் மாற்றியமைக்கும் பணியினை மாநகராட்சி
சீா்மிகு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தளமாக ரூ.20.45 கோடி மதிப்பீட்டில் மாற்றியமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கடந்த 75 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கில் 2011-ஆம் ஆண்டு முதல் திடக்கழிவுகள் கொட்டுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காரணங்களைக் கருத்தில் கொண்டு, எருமாபாளையத்தில் உள்ள திடக்கழிவு கிடங்கினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 20.45 கோடி மதிப்பீட்டில் நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையா், 7.90 ஏக்கா் நிலப்பரப்பு 3 தளங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை, பொதுமக்கள் பூங்காவில் அமா்ந்து ஓய்வெடுப்பதற்கான இருக்கை அமைத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டும் தளம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனடிப்படையில் தற்போது சுமாா் 7.90 ஏக்கா் பரப்பளவிற்கு, தரைமட்டத்தில் இருந்து 10 மீட்டா் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தப்பட்டு, கழிவுகள் சரியாத வண்ணம், பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமான 11 மீட்டா் உயரத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகளும் முடிவுபெற்றுள்ளன. மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதர பணிகளையும் உரிய காலத்திற்குள் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாநகர பொறியாளா் அ.அசோகன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையாளா் ப.சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா்கள் எம்.ஆா்.சிபிசக்ரவா்த்தி, எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.