முகப்பு
இந்தியா

கேரளத் தேர்தல்: இழந்த நேமம் தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா பாஜக?

கேரளத்தில் பாஜக-இடதுசாரி கட்சிகள் மோதல் பற்றி..

Updated On : 18 மார்ச், 2026 at 8:11 AM
வி. சிவன்குட்டி - ராஜீவ் சந்திரசேகர்,
பகிர்:

கேரள மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் போராட்டத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது பாஜக என்றே சொல்லலாம்.

கேரள மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் மும்முனைப் போட்டியாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்றுமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கேரளத்தில் தனது முதல் வெற்றியைப் பெற்ற உற்சாகத்தில், பாஜக நேமம் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது.

திருவனந்தபுரம் நகரின் சில பகுதிகளையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது நேமம் தொகுதி. கடந்த 2016-ஆம் ஆண்டில் பாஜகவின் முதல் மற்றும் ஒரே சட்டப்பேரவை உறுப்பினரான ஓ. ராஜகோபாலுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

மாநில பாஜக தலைவரான ராஜீவ் சந்திரசேகர், தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே, நேமம் தொகுதிக்குத் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்ட நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தனக்குச் சாதகமாக்க முழுவீச்சில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் நேமம் தொகுதியின் வாக்குப்பதிவு முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மூன்று முக்கிய கூட்டணிகளிடையே ஆதரவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னேற்றமடைந்த அதேவேளையில், 2016-ஆம் ஆண்டில் பாஜக எட்டியிருந்த உச்ச நிலையிலிருந்து அதன் வாக்கு சதவீதம் சரிவைக் கண்டது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சந்திரசேகர், திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேமம் தொகுதியில்தான் அதிகபட்ச வாக்கு சதவீதத்தைப் பெற்றார். இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட வாக்குச்சாவடி அளவிலான தரவுகளின்படி, அவர் 45 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

வெற்றி யாருக்கு?

மூத்த மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான வி. சிவன்குட்டி, பாஜகவின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை, மேலும், இத்தொகுதியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றாது என அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

நேமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அத்தொகுதியில் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி "சமரச அரசியல்" செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

2016-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாஜகவிற்கு வாக்களித்ததே, மூத்த தலைவரான ராஜகோபால் முதன்முறையாக இத்தொகுதியில் வெற்றிபெற வழிவகுத்தது என்று இந்திய கம்யூ. கட்சி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது. எனினும், 2021 தேர்தலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு தேர்தல் பேரணியில் பேசியதை சிவன்குட்டி நிறைவேற்றிக் காட்டினார் - அதாவது 2016 கேரள பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றிருந்த ஒரே தொகுதியையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்பதே அது என்று கூறினார்.

சிவன் குட்டி, பாஜகவின் கும்மனம் ராஜசேகரனுக்கு எதிராக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில அளவிலும் தனது தொகுதியிலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முன்னெடுத்த வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டி, இம்முறையும் வெற்றியைப் பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சியின் கோட்டையாகத் திகழும் இத்தொகுதியில் தனது வெற்றி உறுதி என்று சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறி வருகிறார். நேமம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதம் நடத்தவும் நான் தயாராக இருக்கிறேன். அத்தகைய விவாதத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு சிவன் குட்டிக்குத் தகுதி இருப்பதாக நான் கருதவில்லை என சந்திரசேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பிரசார உத்தி கைகொடுக்குமா என்டிவுக்கு?

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அனைத்து 140 தொகுதிகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. நேமம் தொகுதிக்கு அளிக்கப்படும் ஆதித முக்கியத்துவத்தைக் குறித்து மதிப்பிட்டு வரும் சந்திரசேகர், தங்கள் பிரசார உத்தி வெற்றிபெறும் என்று நம்புகிறார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியது போலவே, மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி வாக்குச் சேகரிக்கும் உத்தி, தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் கருதுகிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெற்ற வெற்றியைப் போலவே, இத்தொகுதியிலும் வெற்றி பெற முடியும் என்று பாஜக நம்பிக்கையில் உள்ளது.

திங்களன்று திருமலையில் நடைபெற்ற பேரணியில், சந்திரசேகர் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதேவேளையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, ஞாயிற்றுக்கிழமை இரவு சிவன்குட்டி தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

2021 தேர்தல்களில், சிவன்குட்டி 38.24 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது 2016-ஆம் ஆண்டில் ராஜகோபாலிடம் தோல்வியடைந்தபோது பெற்ற 41.39 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

2021-ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பாஜகவின் கும்மனம் ராஜசேகரன், 35.54 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது 2016-ஆம் ஆண்டில் ராஜகோபால் பெற்ற 47.46 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. முரளீதரன் 2021-ஆம் ஆண்டில் 25.01 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது 2016-ஆம் ஆண்டில் நேமம் தொகுதியில் யுடிஎஃப் சார்பில் போட்டியிட்ட, அதே கூட்டணியைச் சேர்ந்த வி. சுரேந்திர பிள்ளை பெற்ற 9.70 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நேமம் தொகுதியில் தேர்தல் போட்டி மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் நட்சத்திர வேட்பாளரான சந்திரசேகருக்கு ஆதரவாகத் தேசியத் தலைவர்களும், சிவன்குட்டிக்கு ஆதரவாக பினராயி விஜயன் போன்ற தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.. வெற்றி யாருக்குச் சாதகமாக அமைகிறதுயென...

summary

Buoyed by its first Corporation victory in Kerala in the recently held local body elections, the BJP is fired up for its fight in Nemom, a constituency covering parts of Thiruvananthapuram city and its outskirts, which gave the party its first and only MLA in 2016, O Rajagopal.

முழு கட்டுரையைப் படிக்க →