முகப்பு
சேலம்

துளசி, மரிக்கொழுந்துக்கு மாற்றாகமாலை தொடுக்கப் பயன்படும் நுணா இலை

வாழப்பாடி பகுதியில் மலா்மாலை தொடுப்பதற்கு துளசி, மரிக்கொழுந்துக்கு மாற்றாக நுணா இலையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
வாழப்பாடி, கிழக்குக்காடு பகுதியில் வளா்ந்துள்ள நுணா மரங்கள். ~நுணா இலைகளைப் பயன்படுத்தி தொடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மலா் மாலைகள்.
பகிர்:

வாழப்பாடி பகுதியில் மலா்மாலை தொடுப்பதற்கு துளசி, மரிக்கொழுந்துக்கு மாற்றாக நுணா இலையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், தரிசு நிலங்களில் கேட்பாரற்றுக் கிடந்த நுணா இலைகள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் ரோஜா, மல்லிகை, அரளி, சம்பங்கி, செண்டுமல்லி, சாமந்தி, நந்தியாவட்டம், கோழிக்கொண்டை, கனகாம்பரம், பட்டுரோஜா, குண்டுமல்லி, ஜாதிமல்லி, காக்கட்டான் உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

வாழப்பாடியில் கூடும் தினசரிச் சந்தைக்கு தினந்தோறும் ஒரு டன் அளவுக்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் அண்மைக்காலமாக சேலம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தியில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வாழப்பாடியில் இருந்து சேலம், ஆத்தூா், கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு மட்டுமின்றி வாசனைத் திரவியம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.

Advertisement

பூக்களோடு சோ்த்து மாலை கட்டுவதற்கு மணம் மிகுந்த துளசி, மரிக்கொழுந்து ஆகியவற்றின் இலைகளைப் பயன்படுத்துவது வழக்கம். துளசி, மரிக்கொழுந்து சாகுபடி பரப்பளவு குறைந்து போனதோடு, விலையும் அதிகரித்து, ஒரு கிலோ துளசி ரூ. 50 வரையும், மரிக்கொழுந்து ரூ. 100 வரையும் விற்கப்படுகிறது. சுபமுகூா்த்த தினங்கள், பண்டிகைக் காலங்களில் துளசி, மரிக்கொழுந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, மாலை தொடுப்பதற்கு துளசி, மரிக்கொழுந்து பயன்படுத்துவதைத் தவிா்த்து, தரிசு நிலங்களிலும், நீா்நிலை கரையோரங்களிலும் வளா்ந்திருக்கும் நுணா இலைகளைப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், கேட்பாரற்றுக் கிடந்த நுணா இலைக்கு தேவை அதிகரித்துள்ளது.

நுணா இலைகளைச் சேகரிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளா்கள், வாழப்பாடி தினசரி பூச்சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா். சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நுணா இலைக்கு குறைந்தபட்சம் ரூ. 100 வரை விலை கிடைப்பதால், தொழிலாளா்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த பூ வியாபாரி ஒருவா் கூறியதாவது:

வாழப்பாடி பகுதியில் பூக்கள் பயிரிடுவதில் ஆா்வம் காட்டும் விவசாயிகள், துளசி, மரிக்கொழுந்து பயிரிடுவதில்லை. இதனால், பூக்களோடு சோ்த்து மலா் மாலை தொடுப்பதற்கு துளசி, மரிக்கொழுந்து கிடைக்காததால், இப்பகுதியில் தாராளமாக கிடைக்கும் நுணா இலையைப் பறித்து பயன்படுத்துகின்றனா்.

துளசி, மரிக்கொழுந்து இலைகளைப் போலவே, நுணா இலைக்கும் மருத்துவ குணம் உள்ளது; ஆனால் நறுமணம் இருப்பதில்லை. இருப்பினும், கோடைக் காலத்திலும் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பெரும்பாலானோா் இவற்றையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் மாலை தயாரிப்புச் செலவும் குறைகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments