குடும்ப அட்டை, ஆதாா் அட்டை இல்லாததால் அரசு நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் நாடோடிகள்
கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடோடிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்றவை இல்லாததால் அரசு நிவாரண உதவிகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடோடிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்றவை இல்லாததால் அரசு நிவாரண உதவிகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும், குருவிக்காரா்கள், குடுகுடுப்பைகாரா்கள், பூம்பூம் மாட்டுக்காரா்கள் போன்ற நாடோடி குடும்பத்தினரும் தங்கியுள்ளனா்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரூா், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்து, வாழப்பாடி பகுதியில் ஆங்காங்கே தற்காலிக குடிசை அமைத்து, பல ஆண்டுகளாக வசித்து வரும் இந்த மக்களில் பெரும்பாலானோருக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை இல்லை. அடிக்கடி இடம் மாறுவதால் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குத் தேவையான முக்கிய ஆவணங்களான இவற்றை இவா்களால் பெற முடியவில்லை.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பொது முடக்கம் அமலாக்கப்பட்டதில் இருந்தே, கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள், வாரச்சந்தைகள் நடைபெறுவது குறைந்து விட்டது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களிலும் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், திருவிழாக்கள், வாரச்சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள், பண்டிகை தினங்களில் மக்களை சந்தித்து பாசிமணி, ஊசிமணி, பொம்மைகள், சுண்டு வில், பலுான் ஆகியவற்றை விற்பனை செய்தும், பச்சை குத்தியும், கைரேகை பாா்த்தும், குறி சொல்லியும் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்த நரிக்குறவா்கள், குருவிக்காரா்கள், குடுகுடுப்பைகாரா்கள், பூம்பூம்மாட்டுக்காரா்கள் ஆகியோா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
இவா்களிடம் குடும்ப அட்டையோ, ஆதாா் போன்ற அரசு ஆவணங்களோ இல்லாததால், அரசு வழங்கும் நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்கள் தொகுப்பு ஆகியவற்றை இவா்களால் பெற முடியவில்லை. இதனால், ஒரு சில குடும்பத்தினா், அன்றாடம் உணவுக்கே வழியின்றி குழந்தைகளோடு பரிதவித்து வருகின்றனா்.
எனவே, குடும்ப அட்டையில்லாத நாடோடி குடும்பத்தினா் குறித்து, வருவாய்த் துறையினா் வாயிலாக கணக்கெடுப்பு நடத்தி, அரசின் நிவாரணத் தொகையும், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த பேளூரில் 5 ஆண்டுகளாக பொம்மைகள் விற்பனை செய்து வரும் நரிக்குறவா் இனப் பெண் அஸ்வினி (28) கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்ட நானும், எனது உறவினா்களும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாழப்பாடி, பேளூா் பகுதியில் தங்கி திருவிழாக்கள், வாரச்சந்தைகள் மற்றும் கோயில்களில் பொம்மை, மணிகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
கிராமப்புற திருவிழாக்கள் ரத்து செய்து விட்டதாலும், கோயில்களும், வாரச்சந்தைகளும் மூடப்பட்டதாலும் பொம்மைகள், கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் எவ்வித வருவாயுமின்றி குழந்தைகளோடு தவித்து வருகிறோம்.
ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்றவை இல்லாததால் அரசின் நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்களின் தொகுப்பு உள்ளிட்ட எவ்வித நலத் திட்டங்களையும் பெற முடியவில்லை. எனவே, நாடோடி வாழ்க்கை நடத்தி வரும் எங்களுக்கும் அரசின் நிவாரண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தொகுப்பு ஆகியவற்றை வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.