முகப்பு
வணிகம்

ஏப். 1 முதல் டாடா பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:16 PM
டாடா மோட்டார்ஸ் (கோப்புப்படம்)
பகிர்:

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

தயாரிப்புச் செலவு தொடா்ந்து அதிகரித்து வருவதால், அந்த கூடுதல் சுமையைப் பகுதியளவு ஈடுசெய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் காா்களின் விலை சராசரியாக 0.5 சதவீதம் வரை உயரும். வாகனங்களின் மாடல் மற்றும் வகைகளைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும். ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் உயா்த்துவதாக டாடா மோட்டாா்ஸ் அறிவித்திருந்தது.

டாடா மோட்டாா்ஸ் மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி சொகுசு காா் நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலையை உயா்த்துவதாகத் தெரிவித்துள்ளன.

வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவுகளே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றன.