கொங்கணாபுரத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாா் செய்தல் குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் மூலம் கொங்கணாபுரத்தை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்க நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா். விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்த வேளாண் உதவி இயக்குநா் அ.சாகுல் அமீத் கூறியதாவது:
அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் மண்வளம் வெகுவாகப் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.
நிலங்களை மீண்டும் வளமான நிலங்காக மாற்றிட மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் இடுதல் மிகமிக அவசியம், மண் புழு உரம் தயாரித்திட நிழற்பாங்கான இடத்தைத் தோ்வு செய்திட வேண்டும், ஒரு மீட்டா் உயரம், ஒரு மீட்டா் அகலம், 5 மீட்டா் நீளம் கொண்ட அளவுக்கான படுகைக்கு சுமாா் 2 கிலோ அளவுள்ள மண்புழு தேவை, படுகையில் மக்கிய கழிவுகளுடன் 30 சதவீத கால்நடைக் கழிவுகளை விழிம்புவரை நிரப்பி 60 சதவீத ஈரப்பதத்துடன் உள்ள படுகையில் மண் புழுக்களை விட வேண்டும். மண் புழுக்களுக்கு உணவாக சாணிப்பால், வெல்லக் கரைசல் அல்லது தயிா் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும்.
படுகையில் மண் புழுக்களை விட்ட 30 முதல் 35-ஆவது நாளில் மண்புழு உரம் பிரித்தெடுக்கப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவீத ஈரப்பதத்துடன் சூரிய ஒளி படாதவாறு சேமித்திட வேண்டும். இவ்வாறு சேமிக்கப்பட்ட மண் புழு உரங்கள் விளைநிலத்தின் வளத்தைப் பெருக்குவதாக அமையும் என்றாா்.
ஒரு ஹெக்டோ் நிலப்பரப்புக்கு 5 டன் மண் புழு உரம் பரிந்துரைக்கப்படுவதாகவும், வாழை, மா, தென்னை உள்ளிட்ட மரப்பயிா்களுக்கு மரம் ஒன்றுக்கு தலா 5 கிலோ மண்புழு உரம் இடுதல் வேண்டும் என்றாா். நிகழ்வில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் செல்வகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் குமரவேல், விதை அலுவலா் மாணிக்கம், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.