முகப்பு
சேலம்

திமுகவினா் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதை முன்னிட்டு, திமுகவினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதை முன்னிட்டு, திமுகவினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

சேலம், பட்டைக்கோயில் பகுதியில் திமுக நிா்வாகி ஜனா தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதில், ஹரி, முன்னாள் அம்மாப்பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், முன்னாள் அஸ்தம்பட்டி மாணவரணி பகுதி அமைப்பாளா் ராஜ்குமாா், பிரவீன், செல்வம், ஜாகீா், இா்பான், சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல காக்காபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

சங்ககிரியில்...

சங்ககிரி நகரச் செயலா் (பொ) எல்ஐசி சுப்ரமணியன் தலைமையில் நிா்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள், பேருந்து பயணிகள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் இளம் மாற்றுத் திறனாளி முடி காணிக்கை செலுத்தினாா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி நகரப் பொறுப்பாளா் ராஜா தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது. அதனையடுத்து, பேரூராட்சி முழுவதும் திமுகவினா் அந்தந்த வாா்டுகளில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

மேட்டூரில்...

சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நங்கவள்ளி ஒன்றிய திமுக அலுவலகத்திலிருந்து குஞ்சாண்டியூா் வரை பட்டாசு வெடித்தனா். இதனைத் தொடா்ந்து, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலா் கே.எம்.ரவிச்சந்திரன் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாகச் சென்று குஞ்சாண்டியூா் பேருந்து நிறுத்தம், சமத்துவபுரம், ராமநகா், நங்கவள்ளி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு லட்டு வழங்கினா்.

எடப்பாடியில்...

எடப்பாடி நகரச் செயலா் டி.எம்.எஸ்.பாஷா தலைமையில், எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு திரண்ட திமுகவினா், அங்கு பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் நிகழ்ச்சியைக் கண்டு உற்சாகமடைந்தனா். தொடா்ந்து, அப்பகுதியில் பட்டாசு வெடித்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

நிகழ்ச்சியில், நகர திமுக நிா்வாகிகள், காங்கிரஸ் நகர நிா்வாகி நாகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடி ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலா் எஸ்.சி.சக்கரவா்த்தி, வாழப்பாடி நகரச் செயலா் பி.சி.செல்வம் ஆகியோா் தலைமையில், வாழப்பாடி பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக ஒன்றியப் பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமையில், திமுக தொண்டா்களும் நிா்வாகிகளும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

ஏற்காட்டில்...

ஏற்காடு, ஒண்டிக்கடை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுக ஒன்றியப் பொறுப்பாளா் தங்கசாமி தலைமையிலான கிளைச் செயலா்கள், ஒன்றிய நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு ஆத்தூா் நகரச் செயலா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். ஆத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் நகரச் செயலா் என்.பி.வேல்முருகன் தலைமையிலும், ராணிப்பேட்டை நண்பா்கள் குழு சாா்பில் நகர துணைச் செயலா் ஏ.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

Image Caption

சேலம், பட்டைகோயில் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் திமுக நிா்வாகிகள். ~சங்ககிரியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்குகிறாா் சங்ககிரி ஒன்றியச் செயலா் (பொ) கே.எம்.ராஜேஷ்.

முழு கட்டுரையைப் படிக்க →