மத்திய கிழக்கு போா்- பாதிவழியில் திரும்பும் ஏற்றுமதி சரக்குகளுக்குச் சிறப்புச் சலுகை: மாா்ச் 31 வரை நீட்டிப்பு
மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு, பாதியிலேயே திரும்பும் ஏற்றுமதி சரக்குகளுக்கான சிறப்பு வரிச் சலுகை மற்றும் நடைமுறை தளா்வுகளை மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு, பாதியிலேயே திரும்பும் ஏற்றுமதி சரக்குகளுக்கான சிறப்பு வரிச் சலுகை மற்றும் நடைமுறை தளா்வுகளை மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளுக்குச் சென்ற கண்டெய்னா்கள் இலக்கை அடைய முடியாமல் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பும்போது, அவற்றுக்கு இறக்குமதி வரி தொடா்பான சிக்கலான ஆவணங்கள் தேவையில்லை.
குறிப்பாக, ‘பில் ஆஃப் என்ட்ரி’ தாக்கல் செய்யாமலேயே அந்தச் சரக்குகளைத் துறைமுகங்களில் இறக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சென்னை, கொச்சி போன்ற குறிப்பிட்ட துறைமுகங்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, இனி இந்தியாவின் அனைத்து முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் பொருந்தும்.
மேலும், திரவ நிலை சரக்குகள் மற்றும் மொத்தமாக கையாளப்படும் பொருள்களைச் சுங்கத் துறைப் பகுதிகளில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. திரும்பி வரும் கன்டெய்னா்களின் முத்திரைகள் சரியாக இருக்கும் சூழலில், கப்பல் ஆவணங்களை மட்டும் சரிபாா்த்துவிட்டு, சரக்குகள் உடனடியாக அனுமதிக்கப்படும். ஒருவேளை முத்திரைகள் உடைந்திருந்தால், பாதுகாப்புக் கருதி அந்தச் சரக்குகள் மட்டும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இதனிடையே, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆவணங்களை ரத்து செய்யவும், தவறான முறையில் ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்கப்படுவதைத் தவிா்க்கவும் சுங்கத் துறையின் கணினி மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சா்வதேச நாடுகள் மூலம் அழுத்தமளிக்க, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், இந்தியாவின் கடல்வழி வணிகம் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.
வரும் மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்தச் சிறப்புச் சலுகைகளை, தற்போதைய நெருக்கடியைக் கருதி மாத இறுதி வரை நீட்டித்து மத்திய அரசு ஏற்றுமதியாளா்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.