மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!
மத்திய கிழக்கில் போா் பதற்றம் காரணமாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமாா் 1,000 கோடி டாலா் வரை பாதிக்கப்படக்கூடும் என்று ஏற்றுமதியாளா்கள் சங்கம் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போா் பதற்றம் காரணமாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமாா் 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.92,289 கோடி) வரை பாதிக்கப்படக்கூடும் என்று ஏற்றுமதியாளா்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் இந்தச் சூழல், ஏற்கெனவே இந்தியப் பொருள்களுக்கான ஆா்டா் குறைவு, கூடுதல் கப்பல் போக்குவரத்துச் செலவினம் எனப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக விளங்கும் நிலையில், தற்போதைய பதற்றத்தால் அங்குள்ள வா்த்தகா்கள் பல ஆா்டா்களை ரத்து செய்து வருகின்றனா்.
குறிப்பாக, கடல்வழிப் பாதைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் விநியோகக் கால தாமதம் காரணமாக, மாா்ச் மாத ஏற்றுமதி மற்றும் அடுத்த 2026-27-ஆம் நிதியாண்டின் ஒட்டுமொத்த வா்த்தக இலக்குகள் பாதிக்கப்படும் என்று தொழில் துறையினா் கவலை தெரிவிக்கின்றனா்.
சரக்கு போக்குவரத்து செலவினம் கடுமையாக உயா்ந்துள்ளது ஏற்றுமதியாளா்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், ஒவ்வொரு சரக்குப் பரிமாற்றத்துக்கும் 1,500 முதல் 4,000 டாலா் வரை கூடுதல் கட்டணத்தை கப்பல் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இந்தக் கூடுதல் சுமையை முழுமையாக ஏற்றுமதியாளா்கள் மீது சுமத்தாமல், கப்பல் நிறுவனங்கள் அதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தளவாட ரீதியான சிக்கல்களும் ஏற்றுமதியை முடக்கியுள்ளன. துறைமுகங்களில் கண்டெய்னா்களைக் கையாள்வதில் தாமதம் ஏற்படுவதோடு, கப்பல் நிறுவனங்கள் அதிகப்படியான காலதாமதக் கட்டணங்களை வசூலிப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, வங்கிகள் விதிக்கும் அபராதக் கட்டணங்கள் மற்றும் ஏற்றுமதி கடன் திட்டங்களின்கீழ் வழங்கப்பட வேண்டிய வட்டி மானியத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்திய ரிசா்வ் வங்கியின் கவனத்துக்கு ஏற்றுமதியாளா்கள் கொண்டு சென்றுள்ளனா்.
நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, நடப்பாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு இதில் தலையிட்டுத் தகுந்த தீா்வு காண வேண்டும் என தொழில் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.