முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே அரசுப் பள்ளியில் மேள தாளம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு

வாழப்பாடி அருகே வாழப்பாடி அரசுப் பள்ளியில், வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி, மேள வாத்தியம் முழங்க மாணவ-மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அசத்தினர்.

Updated On : 1 நவம்பர், 2021 at 1:30 PM
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேள வாத்தியம் முழங்க மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பளித்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்.
பகிர்:

வாழப்பாடி அருகே வாழப்பாடி அரசுப் பள்ளியில், வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி, மேள வாத்தியம் முழங்க மாணவ-மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அசத்தினர்.

கரோனா பெருந்தொற்று பரவலால் கடந்தாண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ல் இருந்து, 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை, முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 19 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவ- மாணவியருக்கு, ஆசிரியர்கள் வரவேற்பு அளித்து உற்சாகம் அளித்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளி முகப்பில் வாழை மரங்களும், வளாகம் முழுவதும் தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

பள்ளிக்கு வந்த மாணவ- மாணவியருக்கு, மேள வாத்தியம் முழங்க மாலை அணிவித்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உற்சாக வரவேற்பளித்தும், பரிசுப் பொருட்கள், பாடப்புத்தகங்கள், இனிப்புகள் வழங்கியும் மகிழ்வித்து அசத்தினர். இந்நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.சி. பாண்டியன், பள்ளித்தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி.சி செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ஆட்டோ சுரேஷ், நிர்வாகிகள் காமராஜ், ராமசாமி, காளியப்பன், கணேசன், பிரசாந்த், மதி, சுரேஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு, பெற்றோர்களும் பொதுமக்களும், கல்வியாளர்களும் பாராட்டு தெரிவித்தனர். பள்ளி நடைமுறையை வாழப்பாடி வட்டாட்சியர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், அருள் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement

வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர் புகழ் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர், நகர திமுக செயலாளர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆர்.குணாளன், கமல்ராஜா, கோபிநாத், ரமணி, அன்பு, சுந்தர்ராஜன், ஆசிரியர்கள் சுப்பிரமணி, பரிமளா, முனிரத்தினம் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று, மாணவ-மாணவியருக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பளித்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.