கரியக்கோயில் அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.
சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வந்த இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததால் கடந்த 9 ஆண்டுகள் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. கடந்த 2012, ஜனவரி 15 ஆம் தேதி அணை நிரம்பியது. அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து முழுக் கொள்ளவை எட்டியது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் பருவ மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து, வியாழக்கிழமை இரவு 51.85 அடியை எட்டியது. அணையில் 178.02 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 108 கன அடியும் பிரதான மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த உபரிநீா் வெள்ளிக்கிழமை காலை வசிஷ்டநதியை வந்தடைந்தது.
9 ஆண்டுக்கு பிறகு கரியக்கோயில் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால், கரியக்கோயில் அணை பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.