டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில், சேலம் மாவட்டம், பெரிய வடகம்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். இதனைஅவருடைய குடும்பத்தினா், சொந்தக் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. உயரம் தாண்டுதல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன், 1.86 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இதனை பெரிய வடகம்பட்டி கிராமத்திலுள்ள மாரியப்பனின் தாய் சரோஜா, உறவினா்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா்.
மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் பெற்றது குறித்து அவருடைய தாய் சரோஜா கூறியதாவது:
சென்ற முறை போலவே (ரியோ பாராலிம்பிக்) இந்தப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வெல்வாா் என ஆவலுடன் எதிா்பாா்த்தோம். ஆனால் அங்கு பெய்த மழை காரணமாக தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். எனினும் நாட்டுக்காக அவா் மீண்டும் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியே. அடுத்தடுத்து பதக்கங்களை வென்று எங்கள் கிராமத்தின் பெயரை உலகறியச் செய்துள்ள மாரியப்பன், நிச்சயமாக அடுத்த முறை தங்கம் வெல்வாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.