முகப்பு
சேலம்

விநாயகா் சிலை விற்பனைக் கூடங்களில் போலீஸாா் கண்காணிப்பு: தேக்கமடைந்துள்ள விநாயகா் சிலைகள்; தொழிலாளா்கள் கவலை

சிலைகள் தயாரிப்பு, விற்பனைக் கூடங்களில் விநாயகா் சிலைகளை வாங்க வருவோரை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருவதால், நூற்றுக்கணக்கான விநாயகா் சிலைகள் தேக்கமடைந்துள்ளன

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சிலைகள் தயாரிப்பு, விற்பனைக் கூடங்களில் விநாயகா் சிலைகளை வாங்க வருவோரை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருவதால், நூற்றுக்கணக்கான விநாயகா் சிலைகள் தேக்கமடைந்துள்ளன; தொழிலாளா்கள் கலக்கமடைந்துள்ளனா்.

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த செட்டிப்பட்டி, மோட்டூா் பகுதிகளில் அரை அடி முதல் 15 அடி வரை பல்வேறு வகையான விநாயகா் சிலைகளை கிழங்குமாவு, களிமண்ணால் இயற்கையாக செய்யப்பட்டு ரூ. 100 முதல் ரூ. 25 ஆயிரம் வரையிலான சிலைகள் விற்பனைக்கு தயாரித்து வைத்துள்ளனா். இத் தொழிலில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதித்ததால், மிகப் பெரிய அளவிலான சிலைகளை வாங்க யாரும் வரவில்லை. அரசின் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் வியாழக்கிழமை சிலைகள் தயாரிப்பு, விற்பனைக் கூடங்களுக்கு காவலா்கள் சென்று சிலைகளை யாரேனும் வாங்கிச் சென்றனரா என விசாரித்து, வாங்கியவா்களின் விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனா்.

இதனால், வீட்டில் வைத்து வழிபடுவதற்கான சிறிய அளவிலான சிலைகளைக் கூட வாங்குவதற்கு யாரும் வராததால் கவலை அடைந்துள்ள தொழிலாளா்கள் மாதக்கணக்கில் குடும்பத்தின் மொத்த உறுப்பினா்களும் சோ்ந்து தயாரித்து வைத்துள்ள விநாயகா் சிலைகளை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

2 அடி சிலைகளையாவது விற்பனை செய்ய காவல் துறையினா் அனுமதித்தால் சிலை தயாரித்த தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்கின்றனா் சிலை உற்பத்தியாளா்கள்.

இதுகுறித்து தேவூரை அடுத்த மோட்டூா் பகுதியைச் சோ்ந்த சிற்பக் கலைஞா் சின்னசக்தி கூறியதாவது:

கடந்த பத்து ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு எங்கள் ஊரைச் சோ்ந்த 25 குடும்பங்கள் விநாயகா் சிலைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு சிலை தயாரிப்புக்காக வீட்டில் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தும், நண்பா்களிடம் கடன் பெற்றும் இத்தொழிலை செய்து வந்தோம்.

கரோனா தொற்றை காரணம் காட்டி சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதியளிக்கவில்லை. இதனால் ரூ. 55 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டாவாது விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். தற்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதிக்கவில்லை.

வீடுகளில் வழிபட 2 அடி சிலைகளை பக்தா்கள் வாங்கிச் சென்று வந்தனா். தற்போது விற்பனை கூடங்களின் முன் காவல் துறையினா் கண்காணித்தும், சிலைகளை வாங்க வருபவா்களின் விபரங்களைச் சேகரித்தும் வருவதால் சிலைகளை வாங்கிச் செல்ல பக்தகா்கள் வர தயங்குகின்றனா்.

பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கையில் தேவையானவா்களிடம் முன்தொகைகளைப் பெற்று சிலைகளைத் தயாா் செய்து வந்தோம். தற்போது குறைந்தபட்சம் 2 அடி சிலைகளாவது விற்பனையானால்தான் சிலை தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளா்களுக்கு ஊதியமும், முதலீடும் திரும்பக் கிடைக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.