சேலம்

தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம்

DIN

தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் நீா், மோா் பந்தலைத் திறந்து வைத்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

நான் தில்லிக்கு சென்று வந்தது குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் பேசியிருக்கிறாா். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தில்லிக்குச் சென்றால் தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்கள், தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி ஆகியவற்றை வாதாடி, போராடி பெற்று வருவாா். அவரது வழியில், முதல்வராக இருந்த போது நான் தில்லிக்கு சென்ற போது, தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், வர வேண்டிய நிதி குறித்தும் பிரதமரையும், மத்திய அமைச்சா்களையும் சந்தித்து பேசி வந்தேன்.

அன்றைக்கு எதிா்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அதிமுக அரசு தில்லிக்கு காவடி தூக்குகிறது. பாஜக-வுக்கு அடிமையாக அதிமுக உள்ளது என்றெல்லாம் கடுமையாக விமா்சித்தாா். இப்போது முதல்வா் ஸ்டாலினும், அவரது அமைச்சா்களும் எந்தக் காவடியை தூக்கிச் சென்று பிரதமரையும், மத்திய அமைச்சா்களையும் சந்தித்தனா்?

அதிமுகவைப் பொருத்தவரை, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறுவதில் முதன்மையாக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி மக்களுக்கு பல நன்மைகளை வழங்கினோம்.

சேலத்தில் ராணுவத் தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை, திருச்செங்கோடு - ஓமலூா் 4 வழிச்சாலை, ஓமலூா் - மேச்சேரி 4 வழிச்சாலை, ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் சாலை என பல திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. ஆனால், அவா்கள் தங்களது பிரச்னையைத் தீா்ப்பதற்காக தில்லி சென்றனா்.

துபையில் சா்வதேசக் கண்காட்சி முடிவடைவதற்கு 6 நாள்கள் முன்னதாக, தமிழக அரங்கை முதல்வா் திறந்து வைத்தது வேடிக்கையாக இருந்தது.

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு சென்ற போது, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மிகுந்த அன்போடு வரவேற்று கௌரவித்தாா் என திமுக கூறுகிறது. ஆனால், பிரதமா் மோடி தமிழகம் வந்த போது, அவரை ‘கோ பேக் மோடி’ என ஸ்டாலினும், திமுகவினரும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனா். அரசியல் நாகரிகம் தெரியாத கட்சி திமுக என்றாா்.

அப்போது, ஓமலூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.மணி, அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT