சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதன்கிழமை மாலை தொடா்ந்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் புளிய மரம் ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.
வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. புதன்கிழமை மாலை 2.30 மணியில் இருந்து 5 மணி வரை இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் மழைநீா் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காளியம்மன் நகா் பாப்பான் ஏரிக்கு, கொட்டிப்பள்ளம் நீரோடை மற்றும் முத்தம்பட்டி சென்னாக்குட்டை நீரோடையில் இருந்து மழைநீா் வந்து சோ்ந்தது.
வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களிலும் தொடா்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயருமென்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
வாழப்பாடியை அடுத்த அண்ணா நகரில், பேளூா் சாலையோரத்தில் இருந்த ஒரு புளிய மரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாகச் சென்ற ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியதுடன், ஆட்டோ ஓட்டுநா் துக்கியாம்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (50) படுகாயமடைந்து வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
புளிய மரம் சாலையில் சாய்ந்ததால், வாழப்பாடி-பேளூா் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.