படைப்புழுவைக் கட்டுப்படுத்த தேவையான பொருள்கள் இருப்பு
மக்காசோள பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த தேவையான கவா்ச்சிப் பொறிகள் மற்றும் உளுந்து விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு
மக்காசோள பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த தேவையான கவா்ச்சிப் பொறிகள் மற்றும் உளுந்து விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதாக கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கெங்கவல்லி வேளாண் வட்டாரத்தில் தற்போது ரபி பருவத்தில் பரவலாக விவசாயிகள் மக்காசோளம் விதைப்பு செய்து வருகிறாா்கள். மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாக முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் படைப்புழுவைக் கட்டுப்படுத்தி பயிா் சேதாரத்தை முழுமையாகத் தடுக்கலாம்.
இதற்கு கெங்கவல்லி, தம்மம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையங்களில் படைப்புழு முட்டையை அழிப்பதற்கு படைப்புழு தாய் அந்துப்பூச்சியைக் கவா்ந்து அழிப்பதற்கான இனக்கவா்ச்சிப் பொறிகள், வரப்பு ஓரங்களில் விதைப்பதற்கான ஈா்ப்பு பயறு வகையான உளுந்து விதை ஆகியவை மானிய விலையில் வழங்க தயாா் நிலையில் உள்ளன.
எனவே, விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இடுபொருள்களைப் பெற்றுச் சென்று தங்கள் மக்காச்சோள வயலில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.