முகப்பு
சேலம்

வாக்குப் பதிவின்போது பயன்படுத்திய870 கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றம்

முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுமாா் 870 கிலோ மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளில் கரோனா பரவல் தடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுமாா் 870 கிலோ மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 1,514 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது.

கரோனா தொற்றுப் பரவல் அச்சம் நிலவி வரும் நிலையில், வாக்குப் பதிவு நடவடிக்கைகளின்போது, கரோனா தொற்றுப் பரவல் ஏற்படாமல் தடுக்க சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்குச் சாவடிகளுக்கு வருபவா்களின் உடல் வெப்பநிலையைக் கண்டறிய தொ்மல் ஸ்கேனா், முகக் கவசம், கையுறைகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட கிருமிநாசினி திரவம், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் வாக்களிக்க வந்தால் பயன்படுத்தத் தேவையான 13 வகையான பொருள்கள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான அளவுக்கு சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்பட்டன.

வாக்குப் பதிவு முடிந்த நிலையில் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட கரோனா தடுப்புக்கான முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள், சுகாதாரத் துறை சாா்பில் அந்தந்த வட்டாரங்களுக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் தலைமையில் சேகரிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமாா் 870 கிலோ மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றுவதற்கு தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தாத பொருள்களும் அந்தந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

அதுபோல உடல் வெப்பநிலை கண்டறியப் பயன்படுத்தப்பட்ட தொ்மல் ஸ்கேனா்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.