சேலம்

யூ டியூப் பார்த்து பேட்டரியில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்த இளைஞர்:  குவியும் பாராட்டு!

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே,  யூடியூப் பார்த்து  பேட்டரியில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து பயன்படுத்தி வரும் இளைஞருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வைத்தியகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (29). ஆடை வடிவமைப்பு துறையில் இளமறிவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது சேலம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு, உடலையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், மின்சாரத்தில் இயக்கும் சைக்கிளை உருவாக்க வேண்டுமென எண்ணம் தோன்றியுள்ளது.

இதனால் மின்கலங்களின் வகைகள், செயல்படும் விதம், பொருத்தும் முறைகள் குறித்து, சமூக ஊடகமான யூடியூப் சேனல்களில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, தனது பழைய சைக்கிளில் பேட்டரி மின்கலனை பொருத்தி,  மின்சாரத்தில் இயங்குவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக வாங்கி, தினமும் அரை மணிநேரம் இதற்காக ஒதுக்கீடு செய்து, 15 நாட்களில் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை தானை வடிவமைத்துள்ளார். இந்த சைக்கிளை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்.

சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் தேவையற்ற காட்சிகளை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்காமல்,  உடலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், குறைந்த செலவில், மின்கலன் பேட்டரியில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து, பயன்படுத்திவரும் இளைஞர் சுரேஷிற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுரேஷ் கூறியதாவது:

இளமறிவியல் ஆடை வடிவமைப்பு துறையில் பட்டம் பெற்றுள்ள நான், அண்மையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும் உடலுக்கு உறுதியையும் கொடுக்கும் சைக்கிளை, பேட்டரியில் இயக்க வைத்து ஓட்ட வேண்டும் என்றும், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி சைக்கிளை உருவாக்க விரும்பினேன்.

இதற்காக, சமூக வலைதளமான யூ டியூப்பில் இது குறித்த பல்வேறு  காட்சிகளை பார்த்து, தேவையான பொருட்கள் சேகரிப்பு, பொருத்தும் முறைகள் குறித்து பயிற்சி பெற்றேன். இதனையடுத்து, நான் 4 ஆண்டாக பயன்படுத்தி வந்த எனது பழைய சைக்கிளில்,  பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பொருத்தி, மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து பயன்படுத்தி வருகிறேன்.

இந்த சைக்கிளை பார்த்து, பலரும் எனக்கும் இது போன்று பேட்டரி சைக்கிளை வடிவமைத்து கொடுக்குமாறு கேட்டு வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுக்கும் பேட்டரி சைக்கிளை வடிவமைத்து கொடுப்பேன்.

சுற்றுச்சூழலையும்,  உடல் நலனையும் பாதுகாக்கும் வகையில், அனைவரும்  பெட்ரோல், டீசல் எரிபொருளில் இயங்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து விட்டு,  சைக்கிளில் பயணிக்கவேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மின்சாரத்தில் இயங்குமாறு சைக்கிளில் பேட்டரிகளை  பொருத்திக் கொள்ளலாம். 

சமூக ஊடகங்களில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இளைஞர்களும், மாணவர்களும் நல்ல தகவல்களை அறிந்து கொள்வதற்கு, சமூக ஊடகங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

சமூக ஊடகங்களில் தேவையற்ற தகவல்களை பார்ப்பதையும், பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். எனது பழைய சைக்கிளை மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி சைக்கிளாக மாற்றுவதற்கு ரூ. 9,000 மட்டுமே செலவானது.
பேட்டரியை  2 மணிநேரம் வரை சார்ஜ் செய்தால், 20 கி.மீ. தூரம் வரை இந்த சைக்கிளில் பயணிக்கலாம். உள்ளூர் பயணத்திற்கு இந்த பேட்டரி சைக்கிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT