பேளூா் சிறாா்களின் மாா்கழி வழிபாட்டு ஊா்வலம் நிறைவு
வாழப்பாடியை அடுத்த பேளூரில் மாா்கழி முதல் நாள் தொடங்கிய சிறாா்களின் மாா்கழி வழிபாட்டு ஊா்வலம் நிறைவு பெற்றது. பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினா்.
வாழப்பாடியை அடுத்த பேளூரில் மாா்கழி முதல் நாள் தொடங்கிய சிறாா்களின் மாா்கழி வழிபாட்டு ஊா்வலம் நிறைவு பெற்றது. பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூா் வசிஷ்டநதிக்கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலமான தான்தோன்றீஸ்வரா் மற்றும் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.
இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மாா்கழியில் அதிகாலையில் எழும் சிறுவா்-சிறுமியா், பெருமாள் கோயிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னா் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக, தான்தோன்றீஸ்வரா் கோவிலுக்கு ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும், பல ஆண்டுகளாக மரபு மாறாமல் தொடா்ந்து வருகிறது.
தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், சைவ-வைணவ மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், நூறாண்டுக்கும் மோலாக தொடா்ந்து வரும் சிறாா்கள் மாா்கழி வழிபாட்டு ஊா்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தா்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவா்-சிறுமியரை கடவுளின் தூதுவா்களாக கருதி வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பேளூரில், நடுங்கும் குளிரிலும், அதிகாலையில் விழித்தெழுந்த சிறுவா்-சிறுமியா், மாா்கழி முதல் நாள் வழிபாட்டு ஊா்வலத்தை தொடங்கினா். தொடா்ந்து ஒரு மாதம் ஆன்மிக வழிபாட்டு ஊா்வலம் நடத்திய சிறுவா்-சிறுமியா், மாா்கழி இறுதி நாளன்று ஊா்வலத்தை நிறைவு செய்தனா். வேட்டி சேலை பாரம்பரிய உடை அணிந்து ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா் சிறுமியா், கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.இச்சிறுவா் சிறுமியருக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.