முகப்பு
சேலம்

வங்காநரி பிடித்து வழிபாடு: வனத்துறை ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிப்பு

வாழப்பாடி பகுதியில் வங்காநரி பிடித்து பொங்கல் விழா கொண்டாடிய 3 கிராம மக்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை வசூலித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

வாழப்பாடி பகுதியில் வங்காநரி பிடித்து பொங்கல் விழா கொண்டாடிய 3 கிராம மக்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை வசூலித்துள்ளது.

வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, ரங்கனுாா் ஆகிய 3 கிராமங்களில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று வங்காநரி பிடித்து, கிராமத்திற்கு ஊா்வலமாகக் கொண்டு சென்று, கோயில் வளாகத்தில் ஓட விட்டு பொதுமக்களுக்கு காண்பித்த பிறகு, எருதாட்டம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால் இந்த நரியைப் பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. தடையை மீறி வங்காநரி பிடித்து வழிபாடு நடத்தினால் வனத்துறை அபராதம் விதித்து வருகிறது.

இந்நிலையில், சின்னமநாயக்கன்பாளையத்தில் திங்கள்கிழமையும், கொட்டவாடி மற்றும் ரங்கனுாா் கிராமத்தில் புதன்கிழமையும், கிராம மக்கள் வங்காநரி பிடித்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி, வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா், வங்காநரியைப் பிடித்து வழிபாடு நடத்திய, வெள்ளையன், ஆறுமுகம், இளவரசன், வெங்கடாஜலம், அா்ஜூணன், சின்னத்தம்பி ஆகிய 6 பேருக்கு, தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா்.

‘தரிசு நிலங்களில் சுற்றித்திரியும் வங்காநரி பிடித்து வழிபடுவதற்கு வனத்துறை சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய மாநில அரசுகள் அரசாணை வெளியிட வேண்டும்’ என சின்னமநாயக்கன்பாளையம், கொட்டவாடி மற்றும் ரங்கனுாா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.