சேலம்

எடப்பாடியிலிருந்து பாரம்பரிய பழனி பாதயாத்திரை தொடங்கியது

DIN


எடப்பாடி: எடப்பாடி பகுதியிலிருந்து 360 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழனி பாதயாத்திரை நிகழ்ச்சி தொடங்கியது.

திரளான பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.கடந்த காலங்களில் விவசாயிகள் நிறைந்த எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்கள், தை மாதத்தில் அறுவடை பணிகள்  நிறைவடைந்த நிலையில், அடுத்த கோடை மழை பொழிவிற்கு பிறகு மீண்டும் உழவு பணிகளைத் தொடங்குவது வழக்கம். இந்த ஓய்வு காலங்களை பயனுள்ளதாகும் வகையில் அப்பகுதி விவசாயிகள் தங்களின் இஷ்ட தெய்வமான பழனி முருகப்பெருமான் தைப்பூச தினத்தில் நடைபயணமாக சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

அதிகப்படியான போக்குவரத்து வசதியில்லாத அக்காலங்களில் பெரும்பாலானோர் நடை பயணமாகவே பழனிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிவழியாக வந்த அடுத்த தலைமுறையினரும் இந்தப் பாரம்பரிய ஆன்மீக நடைபயணத்தை இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஒரே குழுவாக நடைபயணம் மேற்கொண்ட இப்பகுதி மக்கள் தற்போதி சூழலில் அதிகப்படியான பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் நிர்வாக வசதிக்காக  வன்னியர் குல காவடிக்குழு, பருவதராஜகுல காவடி குழு, ஆலசம்பாளையம் பகுதி  காவடிகுழு, நாச்சியார் காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடிக் குழு என பல்வேறு குழுக்களாக பிரிந்து பழனிக்கு பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி அருகே காவிரிக்கரையில்லிருந்து தொடங்கும் இந்த ஆன்மீக நடைபயணம். ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் வட்டமலை உள்ளிட்ட வழியில் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து பழனியை சென்றடைவார். அங்கு பாலாற்றங்கரையில்  சிறப்பு பூஜை செய்து பால் காவடி பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, வேங்கை காவடி என பல்வேறு வகை  காவடிகளை சுமந்து முருகனைப் போற்றி பாடல்கள் பாடியபடி பழனி மலையை வலம் வருவர். தொடர்ந்து பழனி மலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வர்.

தொடர்ந்து பெரிய அளவிலான பாத்திரங்களில்  பல லட்சம் எண்ணிக்கையிலான பழங்கள் ,தேன்,கற்கண்டு,பச்சைக் கற்பூரம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு பஞ்சாமிர்த பிரசாதம் தயார் செய்வார்கள். அவ்வாறு தயார் செய்யப்பட்ட பஞ்சாமிர்த பிரசாதத்தை தண்டாயுதபாணி சுவாமிக்கு படையல் செய்து அதை பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். மேலும் மாநிலத்தில் வேறு எந்த ஒரு காவடிக்குழுவுக்கும் இல்லாத சிறப்பாக பழனி மலைக்கோயிலில்  ஓர் இரவு தங்கும் உரிமை எடப்பாடி பகுதி காவடி குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். அவ்வாறு மலைக்கோயில் தங்கும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு வரன் பார்ப்பது உறுதி செய்வது வாடிக்கையான நிகழ்வாகும். அவ்வாறு பழனி மலைக்கோவிலில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில்  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே பழனி மலைக்கோவிலில்  தங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT