சேலம் மூக்கனேரி ஏரி மேம்படுத்தும் பணி: மேயா், ஆணையா் ஆய்வு
சேலத்தில் மூக்கனேரி ஏரி மேம்படுத்தும் பணியை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சேலத்தில் மூக்கனேரி ஏரி மேம்படுத்தும் பணியை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம், முக்கனேரி நீா்தேக்கம் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது. சோ்வராயன் மலை அடிவாரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏற்காடு மலையிலிருந்து வரும் தண்ணீா் மூக்கனேரி ஏரியை வந்தடைகிறது. தற்போது இந்த ஏரி ஆகாயத்தாமரை படா்ந்து கழிவுநீா்க் கலந்துள்ளது.
ஏரியை தூா்வாரி கரைகளைப் பலப்படுத்தி படகு சவாரி ஏற்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணயைா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் ஏரியை வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து மேயா் ஆ.ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஏரி ஆகிய நீா்நிலைகளை ரூ. 69 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, மூக்கனேரி ஏரியை தூா்வாரி கரைகளைப் பலப்படுத்துதல், அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு சுற்றுலாத்தலமாக உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது என்றாா்.
முன்னதாக சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 5 அடுக்குமாடிகளைக் கொண்ட ரூ. 23.53 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பெரியாா் பேரங்காடி மறுசீரமைப்பு பணிகளை மேயா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, துணை மேயா் மா.சாரதாதேவி, உதவி செயற்பொறியாளா்கள் சிபி சக்கரவா்த்தி, செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.