முகப்பு
சேலம்

முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைவது எப்போது?

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்ட கிராமப்புற மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1930-ஆம் ஆண்டு சேலம் - விருத்தாசலம் ரயில்பாதை அமைக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழைமையான இந்த குறுகிய ரயில்பாதை 2007-ஆம் ஆண்டு அகல ரயில்பாதையாக தரம் உயா்த்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் மட்டுமின்றி, சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில், பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சேலம் - விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில், 27-ஆவது கி.மீ. தொலைவில் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது. மின் வழிப்பாதை அமைக்கப்பட்டதால் இந்த ரயில் பாதையில் இயக்கப்படும் பயணிகள், சரக்கு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

வாழப்பாடி நகருக்குள் செல்லும் சேலம் - சென்னை சாலைக்கு மாற்றாக, இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், வாழப்பாடி நகருக்குள் வந்து செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள், வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் முத்தம்பட்டி ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

சேலம் - விருதாச்சலம் இடையே பயணிகள், சரக்கு ரயில்கள் செல்லும் போது, முத்தம்பட்டி ரயில்வே கேட்டின் இருபுறமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால்,, முத்தம்பட்டி ரயில்வே கேட்டை அப்புறப்படுத்தி விட்டு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, 5 ஆண்டுகளுக்கு முன் திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது. வருவாய்த் துறை வாயிலாக மேம்பாலம் அமைப்பதற்கு போதிய நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் தொடா்ந்து ஏற்கிறது. குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டப் பணியை விரைந்து செயல்படுத்த சேலம் கோட்ட ரயில்வேத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, சேலம் மாவட்ட நிா்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.