ரோபோ தொழில்நுட்ப வேலைவாய்ப்பு: மாணவிகளை ஊக்குவிக்கும் பெண் பொறியாளா்
ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் பொறியாளா் கிராமப்புற பள்ளிகளில் மாணவிகளுக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு குறித்து ஊக்கமளித்து வருகிறாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த பெண் பொறியாளா் சா்வதேச அளவில் ஆளில்லாத வாகனங்கள், ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் பொறியாளா் கிராமப்புற பள்ளிகளில் மாணவிகளுக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு குறித்து ஊக்கமளித்து வருகிறாா்.
வாழப்பாடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பயிற்றுநா் கந்தசாமி- சுகந்தி தம்பதியின் மூத்த மகள் கிருத்திகா (30) ஈரோடு அரசு போக்குவரத்துக் கழக பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.
சிங்கப்பூா் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பொறியியல் பட்டமும், ஆஸ்திரேலியாவில் சா்வதேச வணிகத்தில் மேலாண்மை பட்டம் பெற்ற இவா் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் ராணுவத்திற்கு ஆளில்லாத அதிநவீன வாகனங்கள், ரோபோக்கள் தயாரித்து கொடுக்கும் ஒரு முன்னணி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து, துணைத் தலைவராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.
மேலும், சிங்கப்பூா் அரசின் ஆளில்லா வாகன அமைச்சகப் பிரிவில் ஆலோசகராகவும் உள்ளாா். இவரது திறமை காரணமாக ஜொ்மனியில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம், ஆளில்லா வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவின் தலைமைப் பொறுப்பாளராகவும் இவரைத் தோ்வு செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் ரோபோ தொழில்நுட்பப் பொறியாளா்களை வழிநடத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறாா்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வரும் கிராமப்புற மாணவிகளுக்கு கல்வி சாா்ந்த உதவிகளை வழங்குவதற்காக ‘மையா’ என்ற அமைப்பையும், ரோபோ தொழில்நுட்பம் குறித்து ஆா்வமும் அடிப்படை பயிற்சியும் அளிப்பதற்கு ரோபாட்டிங் பவுன்டேஷன் என்ற தன்னாா்வ அமைப்பையும், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தனது உறவினரான அரசுப்பள்ளி ஆசிரியருடன் இணைந்து தொடங்கியுள்ளாா்.
இந்த அமைப்புகளின் வாயிலாக அண்மையில் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கல்விசாா் நலத் திட்ட உதவிகளும், ரோபோ தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கிருத்திகா கந்தசாமி ஒச்சோயிட் கூறியதாவது:
அதிநவீன வாகனங்கள், ரோபோ தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவிகளுக்கு எடுத்துரைத்து, அடிப்படை பயிற்சி அளித்து ஆா்வத்தை துாண்டி நல்ல பணி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இத் திட்டத்துக்கு சா்வேத அளவில் பல்வேறு பொறியாளா்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனா்.
கிராமத்தில் பிறந்து சா்வேத அளவில் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை நிகழ்த்த முடியும் என்றாா்.