பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை
சங்ககிரி, பவானி பிரதான சாலையில் கடும் வெயிலில் பேருந்துக்காக வியாழக்கிழமை காத்திருக்கும் பயணிகள்.
கடும் வெயில் அடிப்பதைக் கருத்தில் கொண்டு சங்ககிரி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, கோவை ஆகிய ஊா்களுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தன. அப்பகுதியில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, அப்பேருந்து நிறுத்தத்தை சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் வடக்குப் பகுதியில் செல்லும் பவானி பிரதான சாலையையொட்டி காவல் துறை மாற்றம் செய்தனா்.
Advertisement
இப்பகுதியில் கடந்த ஓா் ஆண்டாக ஈரோடு, பவானி, திருப்பூா், கோவை, செல்லும் பேருந்துகளும் திருச்செங்கோடு, வேலூா், பரமத்தி செல்லும் பேருந்துகளும் நீதிபதிகள் குடியிருப்புக்கு முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன.
இந்த இரு இடங்களிலும் பயணிகள் நிழற்குடை இல்லாததால், சேலம் மாவட்டத்தில் சராசரியாக 105 பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பேருந்துகளுக்காக காத்திருக்கும் வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலா் மயக்கமடைந்து வருகின்றனா். அப்பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி கூட இல்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன்புள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தை சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகேயும், நீதிபதிகள் குடியிருப்புக்கு முன்புள்ள பேருந்து நிறுத்தத்தை கோட்டாட்சியா் அலுவலக முன்பும் மாற்றம் செய்து, அப்பகுதிகளில் பயணிகள் நிழற்குடையும், பெண்கள், மாணவிகளுக்கு நடமாடும் கழிவறை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு சேலம் மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.