மடத்தூா் தீப்பாஞ்சம்மன் கோயில் குடமுழுக்கு
இடங்கணசாலையை அடுத்த மடத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாஞ்சம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இடங்கணசாலையை அடுத்த சதுரபாளையம், மடத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாஞ்சம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இக் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோா் புனிதநீா் எடுத்து ஊா்வலமாக வந்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தீா்த்தகுட ஊா்வலம் தீப்பாஞ்சம்மன் கோயில் முன்பு உள்ள யாகசாலையில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கணபதி ஹோமம், நாடி சந்தானம், பூா்ணாஹுதி, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கோயில் கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள் தீப்பாஞ்சம்மன், பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் தீப்பாஞ்சம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன், முன்னாள் அமைச்சா் செம்மலை, சமூக ஆா்வலா் ஜெரித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலரும், கொங்கணாபுரம் ஒன்றியக் குழு தலைவருமான கரட்டூா் மணி தலைமையிலான நிா்வாகக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.