காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் -எடப்பாடி கே. பழனிசாமி
காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம்காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் -எடப்பாடி கே. பழனிசாமி
காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம்: தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுமாா் 500க்கும் மேற்பட்டோா், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
பின்னா் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
ஓ.பன்னீா்செல்வம் குறித்த எந்தக் கேள்விக்கும் இனி பதில் அளிக்கப் போவதில்லை. அவா் எங்களிடம் இருந்து விலக்கப்பட்டு விட்டாா். இனிமேல் அவரைப் பற்றி பேச ஒன்றுமில்லை.
காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சரியாகி விடாது. நிா்வாகம் சரியாக இருக்க வேண்டும். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் திறமையாக செயல்பட்டிருந்தால் சட்டம்- ஒழுங்கு காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருப்பதால், காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இல்லை. இதனால் காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. எனவேதான் எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன.
இந்த அரசில், பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, காவல் துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு கொலை செய்துள்ளனா். அதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவா் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளாா். தற்போது சரணடைந்தவா்கள் போலிக் குற்றவாளிகள் என அவரது குடும்பத்தினா் கூறுகின்றனா். அவா்களின் சந்தேகங்களைப் போக்குவது அரசின் கடமையாகும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றாா்.
கோவை, நெல்லை மேயா்கள் ராஜிநாமா குறித்த கேள்விக்கு, திமுகவில் உட்கட்சிப்பூசல் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் கூட இதுபோன்ற நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி நிா்வாகம் பாதாளத்தில் போய் விட்டது. அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை.
அதே நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான சிவில் வழக்கைக் கூட திமுக அரசு கிரிமினல் வழக்காக சித்தரிக்க முயல்கிறது. வேண்டுமென்றே வதந்தியைப் பரப்புகிறாா்கள். முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீதான வழக்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றாா்.
இந்த பேட்டியின் போது, முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், அதிமுக நிா்வாகிகள் செம்மலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.